
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற இந்திய அணி இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது. முன்னதாக இந்த தொடரின் 3 போட்டிகளிலுமே இந்தியா போராடி வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.
ஏனெனில் முதல் போட்டியில் 214 ரன்களை துரத்திய இலங்கை 140/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை தோற்கடித்தது. அதே போல் 2வது போட்டியிலும் இலங்கை 117/2 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்றது.
எச்சரித்த கம்பீர்:
ஆனால் கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்த இந்தியா மழையின் உதவியுடன் வென்றது. அதை விட 3வது போட்டியில் கடைசி 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே இலங்கைக்கு தேவைப்பட்டது. அப்போது 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்து கோப்பையை வென்றது.
அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் போராடினால் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்தத் தொடர் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் அடுத்து நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் இடம் பெறாத எஞ்சிய இந்திய வீரர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
அப்போது தான் அதற்கடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று மறைமுகமாக தெரிவித்த கம்பீர் இது பற்றி வீரர்களிடம் பேசியது பின்வருமாறு. “இந்த சிறந்த வெற்றிக்காக வாழ்த்துக்கள் வீரர்களே. பேட்டிங் மற்றும் கேப்டன்ஷியில் அசத்திய சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். தொடர் துவங்குவதற்கு முன்பாக நான் கேட்டதை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து போராடினால் இது தான் நடக்கும்”
“வெற்றியை விட்டுக் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு ரன்னுக்கும் நாம் போராடினால் மட்டுமே இது போன்ற போட்டிகள் நடக்கும். நம்முடைய திறனில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் இடம் பெறாதவர்கள் நீண்ட இடைவெளியை பெறுவீர்கள். அதற்கு நீங்கள் தகுதியானவர்கள். ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு வரும் போது உங்களுடைய திறனையும் ஃபிட்னஸையும் உச்சமாக வைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: மிகப்பெரிய அவமானம்.. நாமெல்லாம் அந்த இடத்துக்கு தகுதியில்லாதவங்க.. இலங்கை அணியால் மஹ்ரூப் வேதனை
“மாறாக அந்த தொடரில் எப்படியாவது அசத்தி விடலாம் என்ற எண்ணத்துடன் வராதீர்கள். எனவே ஃபிட்னஸ் உச்சமாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்” என்று கூறினார்.