இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை விளையாடியது. ஆனால் அந்த 3 போட்டியிலும் சொதப்பிய இலங்கை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் அவமானத் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் போட்டியில் 214 ரன்களை துரத்திய இலங்கை 140/1 என்ற வலுவான நிலையில் இருந்ததால் வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் அடுத்த 5.2 ஓவரில் அனலாக பந்து வீசிய இந்தியா 30 ரன்கள் மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை வீழ்த்தியது. அதே போல 2வது போட்டியிலும் இலங்கை 117/2 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசிய இந்தியா கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மழையின் உதவியுடன் வென்றது.
அவமான வேதனை:
அவை அனைத்தையும் விட 3வது போட்டியில் 138 ரன்களை துரத்திய இலங்கைக்கு கடைசி 12 பந்தில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் அப்போது ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ் ஆகிய பகுதி நேர பவுலர்கள் வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை மடக்கி பிடித்தனர். அதனால் போட்டி சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்படி 3 போட்டிகளிலுமே இலங்கை கையில் வைத்திருந்த வெற்றியை சொதப்பி இந்தியாவிடம் தாரை வார்த்தது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை தகுதியற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக முன்னாள் வீரர் பர்வேஸ் மஹ்ரூப் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மீண்டும் மீண்டும் வலுவான நிலையிலிருந்து சரிந்து வெற்றியை தவற விட்டது அவமானம்”
இதையும் படிங்க: 3வது டி20யில் இந்தியா வரலாறு காணாத சாதனை வெற்றி.. தாரை வார்த்த இலங்கை மோசமான உலக சாதனை
“நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசியில் வெற்றியை நம்மால் ஈட்ட இயலாதது கவலையளிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவை அனைத்தும் சர்வதேச அளவுக்கு நாம் போதுமானதாக இல்லை என்பதே எளிமையான காரணமாகும். இவற்றை பார்ப்பது கடினமாக உள்ளது. நேரலை ஒளிப்பரப்பில் வர்ணனையாளராக இந்த செயல்பாடுகளை வர்ணிப்பது இன்னும் கடினம்” என்று கூறினார்.



