அமெரிக்காவில் ஜூன் 9ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 19வது லீக் போட்டி நடைபெறுகிறது. அப்போட்டியில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது.
எனவே தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கும் அந்த அணியை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. மேலும் போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஏற்கனவே இந்தியா விளையாடியுள்ளது. மறுபுறம் டாலஸ் நகரில் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தற்போது நியூயார்க் நகரில் இந்த உலக கோப்பையில் முதல் முறையாக களமிறங்க உள்ளது.
சாதகம் கிடையாது:
எனவே ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடிய நியூயார்க் மைதானம் பற்றி பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு அதிகம் தெரிந்திருப்பது சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது என பாகிஸ்தானின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்காவிடம் சந்தித்த தோல்வியை மறந்து விட்டு இப்போட்டியில் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2011 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் என்பது மிகப்பெரிய போட்டி. எனவே நான் எங்களுடைய அணிக்கு உத்வேகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய அணியினர் உத்வேகத்துடன் இந்தப் போட்டியில் கவனம் செலுத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக என்ன நடந்தது என்பதை மறந்து விட்டு நாங்கள் முன்னோக்கி செல்ல உள்ளோம்”
“அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை கையாள முடியும். முடிவுகள் முடிவுகளை பார்த்துக் கொள்ளும். இப்போட்டியில் எங்களுடைய திறமையை வைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி எதிரணி மீது அழுத்தத்தை எப்படி போடலாம் என்பதை பார்ப்போம். மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாக நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் என்னால் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது”
இதையும் படிங்க: இதெல்லாம் 1999லயே பாத்துட்டோம்.. இந்தியர்களிடம் கம்பேக் கொடுக்க வேற என்ன வேணும்.. சோயப் அக்தர்
“எனவே அது சாதகமா என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் அது இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெறவில்லை. எங்கள் வீரர்கள் சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கின்றனர். இது போன்ற பெரிய போட்டிகளில் அணியின் கூட்டு முயற்சியே வெற்றியை கொடுக்கும். 2 நாட்கள் முன்பாக பெற்ற தோல்வியை மறந்து விட்டு நாங்கள் நகர வேண்டும்” என்று கூறினார்.