சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
பும்ரா விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை : கவுதம் கம்பீர்
இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே எதிர்வரும் நான்கு போட்டிகள் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் அதற்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே கூறியபடி பும்ராவின் பணிச்சுமை குறித்த திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்காக யார் மீதும் குறை கூற விரும்பவில்லை.
இந்த போட்டியில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து அடுத்து போட்டிக்காக தயாராக இருக்கிறோம். இந்த தொடரில் பும்ராவின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனாலும் அவரது பணிச்சுமை குறித்த திட்டத்தை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. இந்த தொடரில் அவர் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். அது எந்தெந்த போட்டிகள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ
அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்கள் அணியில் ஒரு முக்கியமான வீரர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவரை நாங்கள் உபயோகிக்க வேண்டும் அதனாலே அவரது பணிச்சுமையை சரியாக பராமரித்து வருகிறோம் என கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



