
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக கருதப்படுகிறார். ஏனெனில் 90களில் 16 வயது சிறுவனாக காலடி வைத்து வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை பந்தாடி நாளடைவில் இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்து வந்த சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
அப்படிப்பட்ட அவரின் அந்த இடத்தை நிரப்பி இந்திய பேட்டிங்கை அடுத்ததாக சுமக்க போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்த நிலையில் இளம் வீரராக இருந்த விராட் கோலி அந்த இடத்திற்கு வந்தார். சச்சின் அளவுக்கு முடியாது என்றாலும் தம்மால் முடிந்த அளவுக்கு ரன்களை குவித்த அவர் சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக பல சாதனைகளைப் படைத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார்.
70 சதங்கள்:
கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கிலும் முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார். இதுநாள் வரை தனது அபார திறமையால் எத்தனையோ போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்களை அடித்துள்ளார்.
இதன் வாயிலாக சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து 3-வது பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதுமட்டுமல்லாமல் எத்தனையோ அரை சதங்களை அடித்துள்ள அவர் இந்தியாவிற்கு பலமுறை தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஆட்ட நாயகன் விருதுகளை வென்று வருகிறார்.
முதல் ஆட்டநாயகன் விருது:
இன்று 70 சதங்கள், நிறைய ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் நாயகனாக ஜொலிக்கும் விராட் கோலி தனது முதல் ஆட்டநாயகன் விருதை முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் இருந்து தான் பெற்றார். ஆம் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே சதம் அடித்தனர். குறிப்பாக அப்போட்டியில் இளம் வீரராக இருந்த விராட் கோலி முதல் முறையாக சதம் அடித்து 114 ரன்கள் எடுத்தார். மறுபுறம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கௌதம் கம்பீர் 150* விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் அந்த ஆட்டநாயகன் விருதை வாங்க சென்ற கௌதம் கம்பீர் அதை விராட் கோலிக்கு பரிசளித்து பலரின் மனதை வென்றது மறக்க முடியாத ஒன்றாகும். இந்நிலையில் அந்த நாளில் தமக்கு அளிக்கப்பட்ட விருதை விராட் கோலிக்கு பரிசாக கொடுத்ததன் காரணத்தை பற்றி கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி யூட்யூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் செய்ய கூடாத ஒன்றை நான் செய்யவில்லை. அவர் வருங்காலங்களில் சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை கூட அடிக்கலாம். அவரிடமுள்ள திறமைக்கு நிச்சயமாக அடிப்பார் என நம்புகிறேன். ஆனால் எத்தனை சதங்கள் அடித்தாலும் முதல் சதத்தை நம்மால் மறக்க முடியாது. அந்த வகையில் எனது முதல் சர்வதேச சதம் வங்கதேசத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அடித்தேன்”
“எனவே அன்றைய நாளில் முதல் சதம் அடித்த விராட் கோலிக்கு அந்த நாளை ஸ்பெஷலாக மாற்ற நினைத்தேன். அந்த நாளில் நான் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவ்வாறு செய்யக்கூடாது என்று அர்த்தமில்லை. ஏனெனில் இயற்கையிலேயே நான் அது போன்ற ஒரு மனம் படைத்தவன். அவரும் அதை பெறுவதற்கான தகுதியுடைய நல்ல வீரர். அந்த நாளுக்குப் பின் இன்று அவர் எந்த அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ளார் என்பதை பார்ப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் அவர் இதை விட இன்னும் பல சாதனைகளை படைக்கக்கூடிய தரமானவர்” என கூறினார்.
சர்ச்சையானா கெளதம் கம்பீர் – விராட் கோலி:
இருப்பினும் அந்த தருணத்திற்கு பின் நாளடைவில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே பெரும்பாலும் விரிசல்கள் தான் காணப்பட்டன. ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர்கள் களத்தில் நேரடியாகவே கடும் வாய் வார்த்தைகளிலான சண்டையில் ஈடுபட்டனர்.
அதன்பின் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்த போது பலமுறை அவரை கௌதம் கம்பீர் விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட அவர் நீண்ட நாட்கள் கழித்து இன்று மீண்டும் விராட் கோலியை பாராட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.