
மலேசியாவில் ஐசிசி மகளிர் 2025 அண்டர் 19 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 6 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்தது. அடுத்ததாக தங்களது இரண்டாவது சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அந்தப் போட்டி ஜனவரி 28ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு கோலாலம்பூரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணிக்கு கொங்கடி திரிஷா மற்றும் தமிழக வீராங்கனை கமலினி ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். மறுபுறம் ஸ்காட்லாந்து வீராங்கனைகள் கொஞ்சம் தடுமாற்றமாகவே பந்து வீசினார்கள்.
அதை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய இந்த ஜோடி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்து அட்டகாசமாக விளையாடி அரை சதமடித்தது. நேரம் செல்ல செல்ல நேர்த்தியாகவும் அதிரடியாகவும் விளையாடிய அந்த ஜோடி 13.3 ஓவரில் 147 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. அதன் வாயிலாக மகளிர் அண்டர் 19 உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையையும் அவர்கள் படைத்தனர்.
அதில் தமிழக வீராங்கனை கமலினின் 9 பவுண்டரியுடன் 51 (42) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய த்ரிஷா 13 பவுண்டரி 4 சிக்சருடன் சதத்தை அடித்து 110* (59) ரன்கள் கொடுத்தார். இதன் வாயிலாக மகளிர் அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் சதத்தை அடித்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை திரிஷா படைத்துள்ளார்.
இதற்கு முன் வேறு எந்த நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் இந்த உலகக் கோப்பையில் சதத்தை அடித்ததில்லை. இறுதியில் அவருடன் சேர்ந்து விளையாடிய சனிக்கா சால்க் 29* (20) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 208-1 ரன்கள் எடுத்தது. பின்னர் 209 ரன்களை துரத்திய ஸ்காட்லாந்தை அபாரமாக பவுலிங் செய்த இந்தியா 14 ஓவரில் 58க்கு சுருட்டி வீசியது.
இதையும் படிங்க: 219 ரன்ஸ் அடிச்சும் இதை செஞ்ச.. சேவாக்கிற்கு கடைசி மூச்சிருக்கும் வரை கடமை பட்டுருக்கேன்.. மனோஜ் திவாரி
அதிகபட்சமாக பிப்பா கேலி 12, எம்மா வல்சிங்கம் 12 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆயுசி சுக்லா 4, வைஷ்ணவி சர்மா, கொங்காடி திரிஷா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா ஜனவரி 31ஆம் தேதி தங்களது செமி ஃபைனல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த வெற்றிக்கு 110 ரன்கள், 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய திரிஷா ஆட்டநாயகி விருதை வென்றார்.