இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடினார். அந்த வாய்ப்பில் சென்னையில் நடைபெற்ற தன்னுடைய 6வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் சதத்தை (104*) அடித்தார். ஆனால் அந்தப் போட்டிக்கு பின் 14 போட்டிகளில் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏனெனில் சென்னையில் நடைபெற்ற போட்டியிலேயே அப்போதைய கேப்டன் வீரேந்திர சேவாக் தமக்குத் தாமே ஓய்வு கொடுத்துக் கொண்டு அவருக்கு வாய்ப்பை கொடுத்தார். அதற்கடுத்த போட்டிகளில் முதன்மை கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்தார்கள். அதன் காரணமாக மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கடைசி மூச்சு வரை:
அதுவே தம்முடைய தன்னம்பிக்கையை உடைத்து கேரியர் முடிவதற்கு காரணமாக அமைந்ததாக மனோஜ் திவாரி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்தூரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 219* ரன்கள் அடித்தும் அடுத்த போட்டியிலேயே பெஞ்சில் அமர்ந்து தமக்கு வாய்ப்பு கொடுத்த வீரேந்திர சேவாக்கிற்கு கடைசி மூச்சிருக்கும் வரை நன்றியுடையவனாக இருப்பேன் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சேவாக் என்னுடைய ரோல் மாடல். என்னுடைய கடைசி மூச்சு வரை அவருக்கு நான் கடமை பட்டவனாக இருப்பேன். ஏனெனில் அவர் தன்னைத்தானே நீக்கிக்கொண்டார். இல்லையேல் என்னுடைய வாழ்க்கை வித்தியாசமாக இருந்திருக்கும். வீரேந்திர சேவாக், கௌதம் பாய் ஆகியோருடன் நல்ல உறவு இருந்த போது நான் இந்திய அணியில் 7 வருடங்கள் உள்ளே வெளியேவாக இருந்தேன்”
சேவாக் கொடுத்த வாய்ப்பு:
“அப்போது வீரு பாய் எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சரிவை சந்தித்ததை பார்த்தார். சில நேரங்களில் நான் துவக்க வீரராக விளையாடி விட்டு பின்னர் 5வது இடத்தில் விளையாடியதை அவர் பார்த்தார். அதனால் அவர் எனக்கு நியாயமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். அந்தத் தொடரில் இந்தூரில் அவர் இரட்டை சதத்தை அடித்தார்”
இதையும் படிங்க: பிபிஎல் ஃபைனல்: 108 ரன்ஸ்.. 14 வருட தவத்தை ரசிகனாக வந்து நிறைவேற்றிய வீரர்.. உலக சாதனை
“அடுத்த போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட அவர் நீங்கள் எந்த இடத்தில் விளையாட விரும்புகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அவரிடம் நாட்டுக்காக விளையாடினால் போதும் என்று நான் சொன்னேன். அதே சமயம் உள்ளூரில் 4வது இடத்தில் அதிகமாக விளையாடுவேன் என்று சொன்னேன். உடனே அந்த இடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கௌதம் கம்பீரிடம் அவர் சொன்னார்” எனக் கூறினார்.



