2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா அதை போராடி சாத்தியமாக்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறிப்பாக 2வது போட்டியில் வெறும் 145 ரன்களைத் துரத்திய இந்தியா 74/7 என தடுமாறிய போது ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்து 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த அவர் பேட்டிங்கில் முக்கியமான 58 ரன்கள் சேர்த்து வெற்றியில் ஆற்றிய பங்கை விட 2வது போட்டியில் 6 விக்கெட்களையும் 54 ரன்களையும் எடுத்து அதிகமாக பங்காற்றினார்.
பாட்ஷா ஆஷ் அண்ணா:
அதிலும் குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இந்த சுற்றுப்பயணம் முழுக்க இந்தியாவுக்கு சவாலை கொடுத்த மெஹதி ஹசனை கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கி 42* ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்த அவரை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனெனில் இப்போட்டியில் மட்டும் தோற்றிருந்தால் வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசத்திடம் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும். அது மட்டும் நடந்திருந்தால் வங்கதேச அணியினர் மற்றும் ரசிகர்கள் எவ்வளவு ஆட்டம் போடுவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு ஸ்பின்னரான அஷ்வின் உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடிய பேட்டிங் அனுபவத்தை இந்தியாவுக்காக பலமுறை பயன்படுத்தி சில வரலாற்று அவமானத் தோல்விகளிலிருந்து காப்பாற்றியுள்ளார். முதலில் 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்டு வரலாற்று தோல்வியை சந்தித்தப் பின் விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் 2வது போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து காப்பாற்றிய ரகானே தொடரை சமன் செய்ய உதவினார்.
அந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் 407 ரன்களை துரத்திய இந்தியாவின் வெற்றிக்கு போராடிய ரிசப் பண்ட் 97 ரன்கள் குவித்து அவுட்டான போது தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது களமிறங்கிய அஷ்வின் – ஹனுமா விகாரியுடன் கைகோர்த்து வெறித்தனமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய பவுலர்களிடம் அடி வாங்கிக் கொண்டு காயத்துடன் 39* (128) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் போட்டியை டிரா செய்ய உதவினார்.
அதனால் தப்பிய இந்தியா அடுத்ததாக காபா டெஸ்டில் சுப்மன் கில், ரிஷப் பண்ட், தாகூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல ஹீரோக்களின் உதவியால் வென்று 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை மீண்டும் அதன் சொந்த மண்ணில் சாய்த்தது. அதே போல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்களை துரத்திய இந்தியா 31/4 என தடுமாறிய போது வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 82* ரன்கள் குவித்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த போராட்டத்தை கடைசி நேரத்தில் ஒய்ட் பந்தில் ஸ்டம்பிங் ஆன தினேஷ் கார்த்திக் வீணடிக்கும் வகையில் அவுட்டானார்.
ஆனால் அடுத்ததாக வந்து அஷ்வின் அதே ஒயிட் வலையில் சிக்காமல் நைசாக ஒதுங்கி ஒரு எக்ஸ்ட்ரா பந்தையும் ரன்னையும் பெற்றதுடன் அடுத்த பந்தில் லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவின் சரித்திர வெற்றியை பினிஷிங் செய்தார். அப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோன்றியிருந்தால் இந்தியா என்ன அவமானத்தை சந்தித்திருக்கும் என்றும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதையும் படிங்க: என்னய்யா உங்க நியாயம்? புஜாராவை விட அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் – இளம் வீரருக்காக ரசிகர்கள் அதிருப்தி
அந்த வகையில் அன்று சிட்னி, நேற்று மெல்போர்ன், இன்று மிர்பூரில் இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய அஷ்வினை பாட்ஷா ரஜினியைப் போல் கையில் முத்தம் கொடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விதவிதமாக கொண்டாடி வருகிறார்கள்.



