சர்வதேச கிரிக்கெட்டில் பல நட்சத்திர வீரர்கள் ஒரு கட்டத்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவதும் அது நாளடைவில் கண்டுபிடிக்கப்படுவதும் வரலாற்றில் பலமுறை அரங்கேறியுள்ளது. அந்த வரிசையில் தற்போது இலங்கையை சேர்ந்த முன்னாள் வீரர் சசித்ரா சேனநாயக்கா சூதாட்டம் புகாரில் சிக்கியது மட்டுமல்லாமல் நேரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆஃப் ஸ்பின்னராக இலங்கைக்காக 49 ஒருநாள், 24 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். குறிப்பாக கேரம் பந்துகளால் புகழ்பெற்ற அவர் டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட்களும் ஒருநாள் போட்டிகளில் 53 விக்கெட்டுகளும் எடுத்து 2014 டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
சூதாட்ட புகாரில் இலங்கை வீரர்:
இருப்பினும் ஓய்வுக்கு பின் உள்ளூர் அளவில் விளையாடி வரும் இலங்கை பிரீமியர் லீக் டி20 தொடரில் கடந்த 2020 சீசனில் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார். குறிப்பாக அந்த தொடரில் விளையாடவில்லை என்றாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து அணுகியதாக தெரிய வருகிறது. இந்த தகவல் இலங்கை விளையாட்டு துறையின் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 2019 விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக கடந்த மாதமே இலங்கையின் உள்ளூர் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்திருந்தது. அந்த நிலைமையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த விசாரணையில் அவருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
அது தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அவரை நேரில் கொண்டுவருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிய வருகிறது. அதன் காரணமாகவே தற்போது இலங்கை காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த செய்தி இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வெறும் 1 இன்னிங்ஸ் நல்லா விளையாடிய இஷானுக்காக பழசை மறந்து அவர ட்ராப் பண்ணிடாதீங்க – இர்பான் பதான் எச்சரிக்கை
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மேற்கொண்டு நடைபெறும் விசாரணையில் அவருக்கு எதிராக ஆதாரங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இன்னும் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இறுதியில் அவருக்கான தண்டனைகள் பற்றிய விவரங்களை நீதிமன்றம் அறிவிக்கும் என்றும் செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.