- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்ப்ராஸ் கானை புறக்கணித்து ருதுராஜ், ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? உண்மையை விளக்கிய பிசிசிஐ நிர்வாகி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்திக்க பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் முக்கிய காரணமாக இருந்த நிலையில் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதை விட ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இந்திய டெஸ்ட் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுப்பதே எழுதப்படாத விதிமுறையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து 80 என்ற சராசரியில் 3505 ரன்களை குவித்து வரும் சர்பராஸ் கான் முதல் வீரராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே நியாயமாகும். இருப்பினும் இப்போதெல்லாம் ரஞ்சிக் கோப்பையை மறந்து விட்டு ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கு தேர்வுக்குழுவினர் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

காரணம் என்ன:
அந்த வரிசையில் 2023 ஐபிஎல் சீசன் மட்டுமல்லாமல் எப்போதுமே சிறப்பாக செயல்படாத சர்ப்ராஸ் மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முறையே 42, 80 என்ற சராசரியில் ரஞ்சி கோப்பையில் ரன்களை குவித்துள்ள போதிலும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு வருவதால் இந்தியாவுக்காக தேர்வாகியுள்ளனர். அதே போல பிரியங்க் பஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற சமீப காலங்களில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் பேசாமல் ரஞ்சிக்கோப்பையை குப்பையில் தூக்கி போடுங்கள் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 ரஞ்சி கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து அபிமன்யு ஈஸ்வரன் சொதப்பி வருவதால் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கும் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி சர்பராஸ் கான் பெரிய அளவில் தரமற்ற பவுலிங்கை எதிர்கொண்டு ரன்களை எடுத்த காரணத்தால் சேர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அதாவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு தகுந்தார் போன்ற இளம் வீரர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ருதுராஜ் கைக்வாட் நல்ல வேகம், பவுன்ஸ் கொண்ட தரமான பவுலிங்கை எதிர்கொள்ளும் திறமையை கொண்டிருப்பதாலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் இளம் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அதை எப்படி அடிக்கிறார்கள் என்பதையே தேர்வுக்குழுவினர் பார்ப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கான் வேகபந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது. அதே போல அபிமன்யு ஈஸ்வரன் பெங்கால் அணிக்காக கடந்த 7 ரஞ்சிக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்”

“நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதை எப்படி அடிக்கிறீர்கள் என்பதே முக்கியமாகும். எஸ்எஸ் தாஸ் தலைமையிலான தற்காலிக தேர்வுக்குழு இப்படி நினைக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ரஞ்சி கோப்பையில் ருதுராஜ் 40 என்ற சராசரியை மட்டுமே கொண்டிருந்தாலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுவார் என்று அவர்கள் நினைக்கின்றனர். அதனால் தேர்வு குழுவினர் வெறும் ரன்களை மட்டும் பார்ப்பதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஜோயல் கார்னர் ஓசில தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு, 1983 உ.கோ ஃபைனலில் தனது மொக்க இன்னிங்ஸ் பற்றி – மனம் திறந்த கவாஸ்கர்

அவர் கூறுவது போல நட்சத்திர சீனியர் வீரரான புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் கடந்த ஒன்றரை வருடமாக தொடர்ந்து சதங்களை அடித்து பெரிய அளவில் ரன்களை குவித்து கம்பேக் கொடுத்த போதிலும் வங்கதேசத்துக்கு எதிராக போட்டியை தவிர்த்து 2023 ஆஸ்திரேலிய தொடரிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் சுமாராகவே செயல்பட்டார். அந்த வகையில் தரமற்ற பவுலிங்கை எதிர்கொண்டு பெரிய ரன்கள் அடிக்கும் வீரர்களை விட தரமான ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -