
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள், அதிக சதங்கள் உட்பட பேட்டிங்கில் உள்ள அத்தனை சாதனைகளையும் அவ்வளவு சுலபமாக உடைத்து விட முடியாத அளவுக்கு படைத்துள்ளார். இருப்பினும் அவருக்கு பின்பு வந்த மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி அவரைப் போலவே பேட்டிங்கில் அதிரடியாக ரன்மழை பொழிந்து ஒரு ரன் மெஷினாக அடுத்தடுத்து சதங்களை அடித்து அவரின் இடத்தை அப்படியே பூர்த்தி செய்து வருகிறார். அதிலும் 31 வயதிலேயே 70 சதங்களை தெறிக்கவிட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் 3-வது இடம் பிடித்துள்ளார்.
அதிலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி கொண்டிருந்த அவரை கிரிக்கெட்டின் கிங் என்று ரசிகர்களும் ஜாம்பவான்களும் கொண்டாடினார்கள். ஆனால் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் அதன்பின் “யார் கண்பட்டதோ” என்பதுபோல் கடந்த 2 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
மோசமான பார்ம்:
சொல்லப்போனால் அந்த போட்டிக்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 104* போட்டிகளாக கடந்த 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் மோசமான பார்மல் தவித்து வருகிறார். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி முதல் முறையாக 50கும் கீழ் (49.95) குறைந்துள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற சாதனை படைத்த அவர் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இதனால் ஓடிஓடி ரன் மெஷினாக ரன்கள் எடுத்த அவரின் உடம்பும் மனதும் ஓய்ந்து விட்டதால் 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து மீண்டும் முழுமையான ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி புத்துணர்ச்சியான முடிவு எடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி உட்பட பல முன்னாள் வீரர்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரை போலவே 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருவதால் விராட் கோலியை விட அவர் சிறந்தவர் என அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அடிக்கடி ஒப்பிட்டு வந்தார்கள்.
பாபர் தான் கிங்:
ஆனால் தற்போது ஒருபடி மேலே சென்றுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் பாபர் அசாம் தான் கிரிக்கெட்டின் கிங் என்ற வகையில் பேசியுள்ளார். 2 வருடங்களாக இழந்த தனது பார்மை மீட்டெடுக்க முடியாமல் தவிப்பதால் விராட் கோலி முடிந்துபோன கதை என்ற வகையில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக தற்போது பாபர் மேலே உள்ளார். ஒரு கட்டத்தில் உட்சபட்ச பார்மில் இருந்த விராட் கோலி தற்போது மந்தமடைந்துவிட்டார். ஆனால் மறுபுறம் பாபர் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்” என்று பேசினார்.
இது மட்டுமல்லாமல் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை விட பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி தான் சிறந்தவர் என்றும் அவர் உருட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதேபோல் பும்ராவை விட ஷாஹீன் சிறந்தவர். ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்கும் போது பும்ரா ஏற்கனவே டெஸ்ட் அல்லது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார் என்பது போன்ற விமர்சனத்திற்கு உள்ளாகினார். ஆனால் தாம் சிறந்தவர் என்றும் பும்ராவை விட தரமானவர் என்றும் தற்போது ஷாஹீன் நிரூபித்துள்ளார்” என கூறினார்.
சுமார் பண்ட்:
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த இந்தியாவின் ரிசப் பண்ட்டை விட பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்மான் சிறந்தவர் என்றும் ஆகித் ஜாவேத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியுள்ளது பின்வருமாறு. “சமீப காலங்களாக பண்ட்டை விட ரிஸ்வான் சிறந்து விளக்குகிறார். ரிஷப் பண்ட் நல்ல நுணுக்கம் நிறைந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை”
“ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ரிஸ்வான் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புக்கு முன்பாக பண்ட் பின்தங்கி உள்ளார். மேலும் ரிஷப் பண்ட் எப்போதும் அதிரடியான வீரர் என அனைவரும் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : 11 வருஷமா இந்தியாவுக்கு வந்துட்டு இருக்கேன். ஆனா இதை எப்படி தவறவிட்டேன்னு தெரியல – பேட் கம்மின்ஸ் பதிவு
ஆனால் அதிரடி என்பது ஒருசில பந்துகளில் சிக்ஸர்களை அடித்து உடனடியாக அவுட்டாவது கிடையாது. கடைசி வரை களத்தில் நின்று போராடி போட்டியை பினிஷிங் செய்வதே அதிரடியாகும்” எனக்கூறியுள்ள அவர் முஹம்மது ரிஸ்வான் அதிரடிக்கு உண்மையான முன்னோடியாக திகழ்வதாக பாராட்டினார். இப்படி விராட் கோலி மட்டுமல்லாது 3 இந்திய வீரர்களை அவர் மட்டம் தட்டி பேசியது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.