சர்வதேச டி20 போட்டிகளில் தரமில்லை, வருடத்துக்கு 2 ஐபிஎல் நடத்தலாம் – முன்னாள் வீரர்கள் கோரிக்கை

IPL 2022
Advertisement

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் 74 போட்டிகளுடன் ரசிகர்களை திரில்லர் நிறைந்த போட்டிகளுடன் மகிழ்வித்த நிறைவு பெற்றது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் ராஜஸ்தனை தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

IPL 2022 (2)

கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளுக்கு நிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று திரில்லாக அமைவதால் உலக கோப்பையை விட ஐபிஎல் சிறந்த தொடர் என்று சுனில் கவாஸ்கர், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் சமீப காலங்களில் பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

அழுப்பான சர்வதேச டி20:
அனல் பறக்கும் பேட்டிங், அட்டகாசமான பவுலிங், தெறிக்கவிடும் பீல்டிங், ஒரு பந்தில் தலைகீழாக மாறும் வெற்றி என இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் ரசிகர்கள் கணிக்க முடியாத எதிர்பாரா முடிவுகளை கொடுக்கிறது. இப்படி நாற்காலியின் நுனியில் நகத்தை கடிக்கும் அளவுக்கு தரமான பரபரப்பான ஐபிஎல் தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு சர்வதேச அளவில் நடைபெறும் டி20 போட்டிகளை பார்க்கும்போது அலுப்பு தட்டும் வகையில் அமைகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோதும் 30% நேருக்குநேர் தொடரை தவிர எஞ்சிய தொடர்களில் தரம் என்பது மிகக் குறைவாகக் காணப்படுகிறது.

INDvsSL

எடுத்துக்காட்டாக இந்தியா – இலங்கை, வங்கதேசம் – இலங்கை, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மோதும்போது ஒரு அணி பலவீனமாக இருப்பதால் அது போன்ற போட்டிகள் தரமாக அமைவதில்லை. அப்படி தரமில்லாத போட்டிகளை நடத்துவதிலும் பார்ப்பதிலும் எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர்கள் வருடத்திற்கு 2 ஐபிஎல் அல்லது அதிகமான ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -

உலககோப்பையில் மட்டும்:
குறிப்பாக டி20 போட்டிகளை உலக கோப்பையில் மட்டும் வைத்துவிட்டு அந்த சமயங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக வாய்ப்பளித்து ஐபிஎல் போட்டிகளை அதிகமாக நடத்தலாம் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதிகப்படியான தரமில்லாத சர்வதேச நேருக்கு நேர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தபோது அதை எனது கண்களால் நேரடியாகப் பார்த்த போது கூட இதை தெரிவித்திருந்தேன். எனவே இது கால்பந்தாட்டத்தை போல மாற வேண்டும். அதாவது உலக கோப்பையில் மட்டும் டி20 போட்டிகள் நடத்த வேண்டும். ஏனெனில் தரமில்லாத நேருக்கு நேர் டி20 போட்டிகளில் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்”

Shastri

“கடந்த 6 வருடங்கள் நான் பயிற்சியாளராக இருந்தபோது உலக கோப்பை தவிர இந்தியா விளையாடிய ஒரு சிறப்பான டி20 போட்டி கூட எனக்கு நினைவில்லை. ஒரு அணி உலகக்கோப்பை வென்றால் அதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். துரதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் செய்யவில்லை. மறுபுறம் உலகில் அனைத்து நாடுகளிலும் தனியார் டி20 போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுதான் அவர்களின் உள்ளூர் கிரிக்கெட்டாகவும் மாறியுள்ளது. அதை விளையாடிவிட்டு 2 வருடங்களுக்கு ஒரு முறை உலக கோப்பை விளையாடலாம்” என்று கூறினார்.

- Advertisement -

2 ஐபிஎல்:
இது பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தது பின்வருமாறு. “ஒரு வருடத்தில் 2 ஐபிஎல் நடைபெறும் என்று உண்மையில் நான் எதிர்பார்க்கிறேன். அது வெகுதொலைவில் இல்லை” என்று தெரிவித்தார்.

MI - Ravi Shastri

அதை ஒப்புக்கொண்ட ரவி சாஸ்திரி அதற்கு ஆதரவாக மேலும் பேசியது பின்வருமாறு. “இதுதான் வருங்காலம், அந்த அசுரனை நோக்கித்தான் இது சென்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து உங்களால் மறைய முடியாது. 140 போட்டிகளை 70 – 70 என இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இது சற்று அதிகப்படியானதாக கருதலாம். ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டை பொருத்தவரை எதுவுமே அதிகமானது கிடையாது. கடந்த 2 மாதங்களாக கட்டுப்பாட்டு வளையத்திற்கு வெளியே இருந்த நான் மக்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்று கவனித்தேன். அதில் ஒவ்வொரு தருணத்தையும் அவர்கள் மிகவும் விரும்புவதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

அதாவது உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக இருக்கும் கால்பந்தில் சர்வதேச போட்டிகள் உலக கோப்பையில் மட்டும் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவதால் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். அதற்கிடையில் நிறைய தனியார் கால்பந்து தொடரில் நடைபெறுவதைப் போல ஐபிஎல் தொடரை அதிகப்படுத்திவிட்டு தரமற்ற டி20 போட்டிகளை உலக கோப்பையில் மட்டும் நடத்தினால் தரமாகவும் இருக்கும் அனைவரும் விரும்பிப் பார்ப்பார்கள் என்று ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, டேனியல் வெட்டோரி, இயன் பிஷப் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement