உங்களால் தான் ப்ளேயர்ஸ் ஃபிக்சிங்ல பண்றாங்க, தோல்விக்கு பின் பாக் வாரியத்தை விளாசி மியான்தத் ஓப்பனாக பேசியது என்ன

Javed
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து தோற்கடித்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்து சாய்த்தது. அதனால் 1992 உலக கோப்பையில் இம்ரான் கான் தலைமையில் நிகழ்த்திய மேஜிக்கை இம்முறையும் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் நிகழ்த்தி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் உறுதியாக நம்பினார்கள்.

PAK vs ENG Jose Buttler Babar Azam

- Advertisement -

ஆனால் கடைசி நேர ட்விஸ்ட் போல பந்து வீச்சில் உயிரை கொடுத்து போராடியும் பேட்டிங்கில் 150 ரன்கள் எடுக்க தவறிய பாகிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து 30 வருடங்கள் கழித்து பழி தீர்த்து 2வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் ஆரம்பத்திலேயே வாயில் அதிகமாக பேசிய பாகிஸ்தானை அனைவரும் கிண்டலடித்து வருகிறார்கள். மேலும் பந்து வீச்சில் போராடியும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிய பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையிலும் இதே போல் ஃபைனல் வரை சென்ற பாகிஸ்தான் பேட்டிங்கில் சொதப்பி இலங்கையிடம் தோல்வியை சந்தித்தது.

பிக்சிங் காரணம்:

இந்நிலையில் இது போன்ற விமர்சனங்களை சந்திக்கும் வீரர்கள் திடீரென்று அணியில் நீக்கப்பட்டால் அடுத்ததாக வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று யோசிப்பதால் ஏற்படும் பயத்தாலேயே சூதாட்டத்தில் ஈடுபடுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார். குறிப்பாக இப்போதெல்லாம் பாகிஸ்தான அணியில் மேத்தியூ ஹெய்டன், ஷான் டைட், வெர்னோன் பிளாண்டர் என பயிற்சியாளர்கள் குழுவில் கூட முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத பாகிஸ்தான் வாரியம் வெளிநாட்டவர்களை தேடி செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Pakistan

அதே அணுகு முறையை கடந்த காலங்களில் பாகிஸ்தான் வீரர்களிடமும் கடைபிடித்த காரணத்தாலேயே வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக நிறைய வீரர்கள் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நாட்டுக்காக விளையாடினோம். ஆனால் இப்போது விளையாடும் வீரர்களின் வருங்காலம் என்ன? அவர்களை (வெளிநாட்டு பயிற்சியாளர்களை) இந்த ஸ்டூடியோவுக்கு அழைத்து வாருங்கள். அவர்களிடம் கிரிக்கெட் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்பது போன்ற சில கேள்விகளை கேட்க வேண்டும். எப்போதுமே பாகிஸ்தான் வாரியம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே வெளிநாட்டு பயிற்சியாளர்களை வாங்குகிறார்கள்”

- Advertisement -

“கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடியவர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிட்டது. இங்கு என்னை பற்றி பேசவில்லை. ஆனால் எனக்கும் நிறைய (சூதாட்ட) வாய்ப்புகள் வந்தும் நான் அதை நோக்கி செல்லவில்லை. இருப்பினும் தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும்? அதாவது தற்போது அவர்கள் இங்கே சிறப்பாக செயல்படவில்லை. ஒருவேளை அதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டால் அவர்களுக்கு எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியாது. அதன் காரணமாகவே ஃபிக்சிங் நடைபெறுகிறது. அனைவருமே தங்களது கேரியர் என்ன ஆகுமோ என்ற பயத்தில் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறினார்.

Javed 1

அதாவது பாகிஸ்தானுக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு வாரியம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் அதனாலேயே கிரிக்கெட்டை தவிர்த்து வாழ்வதற்கு வேறு வழி தெரியாத சில வீரர்கள் விளையாடும் போதே தவறான சூதாட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். அதிலும் பயிற்சியாளர்களில் கூட முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வெளிநாட்டவர்களை தேடி சென்று வாய்ப்பு கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் மீது காலம் காலமாக நிலவும் அவப்பெயருக்கு பாகிஸ்தான் வாரியமே காரணம் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் அவரது இந்த கருத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கிறது. முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த போது பணமே வேண்டாம் நான் வந்து இலவசமாக பயிற்சி கொடுக்கிறேன் என்று பாகிஸ்தான் வாரியத்திடம் வெளிப்படையாக அவர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement