
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நவம்பர் 14-ஆம் தேதி துவங்கியது. அந்த வகையில் இன்று நடைபெற்ற முதலாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது. இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 37 ரன்களை அடித்துள்ளது. இதன் காரணமாக 122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கின்றது.
இதனால் நிச்சயம் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகரும் பட்சத்தில் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளதாலும், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ஆழம் என்பதாலும் இந்திய அணி பலமாகவே உள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வரலாற்று சாதனையாக மாறியுள்ளது. அதாவது இந்திய அணி கடந்த 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஜ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதிலிருந்து தற்போது வரை 93 ஆண்டுகளில் பிளேயிங் லெவனில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் ஒன்றாக ஒரே அணியில் விளையாடியது இல்லை.
இதையும் படிங்க : 20 ஓவர்களில் 297 ரன்கள்.. யு.ஏ.இ டீமை வச்சி செய்து சாதனை சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
ஆனால் இன்றைய போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என ஆறு இடதுகை வீரர்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இப்படி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறு இடதுகை பேட்ஸ்மேன்கள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.