கரோனா வைரஸ் பரவுவதிலிருந்து வீரர்களை பாதுகாக்க பந்தில் எச்சில் இனிமேல் தடவக் கூடாது என்று ஐசிசியால் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பந்தை சொரசொரப்பாக வைக்க சின்னதாக ஒரு பொருளை அளிக்கலாம் எனவும் ஐசிசி ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வீரர்கள் மீண்டும் களத்திற்குள் வந்து ஆடும் போது பந்தை சொரசொரப்பாக வைக்க எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பார்கள். இதற்கு பதிலாக தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு சிறு பொருளை வீரர்களுக்கு அளிக்கலாம் என ஐசிசி ஆலோசனை செய்து வருகிறது.
இந்த முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மைக்கேல் ஹோல்டிங், பாகிஸ்தான் அணியின் வக்கார் யூனிஸ் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில்: பந்தில் எச்சில் அல்லது வியர்வையை தேய்ப்பது மிகவும் இயற்கையானது. அது களத்தில் இயல்பாகவே நடக்கும். இதனை கட்டுப்படுத்தவே முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில்.. வீரர்கள் அனைவரும் மருத்துவ சோதனைக்கு பிறகு தான் மைதானத்திற்குள் அனுப்பப்படுவார்கள். அப்படி இருக்கையில் வீரர்களின் எச்சில் குறித்து கவலையே படவேண்டாம் என்று கூறியுள்ளார் அவர். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் இதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து ஐ.சி.சி. என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற முடிவினை விட மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து எப்போது போட்டி துவங்கும் என்று ரசிகர்கள் தங்களது கேள்விகளை சமூக வலைத்தளம் மூலம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.



