
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடுகிறது. ஆனால் அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இலங்கை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ஆரம்பத்திலேயே சொந்த மண்ணில் தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த இலங்கை புதிய கேப்டன் அசலங்கா தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
முன்னதாக முதல் போட்டியில் 214 ரன்களை துரத்திய இலங்கை ஒரு கட்டத்தில் 140/1 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. அதனால் இலங்கை கண்டிப்பாக வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பின் அனலாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை சாய்த்து அபார வெற்றி பெற்றது.
மோசமான தோல்வி:
அதே போல 2வது போட்டியிலும் ஓரளவு நன்றாக துவங்கிய இலங்கை கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டும் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. மறுபுறம் இலங்கை அணியின் சொதப்பலை பயன்படுத்தி அபாரமாக பந்து வீசிய இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்று இந்தியா அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் அடுத்தடுத்த நாட்களில் தோல்வியை சந்தித்த இலங்கை சர்வதேச தரத்திற்கு நிகரான அணியாக இல்லை என்று தெரிவதாக முன்னாள் வீரர் பர்வேஸ் மஹ்ஃரூப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிலும் அடுத்தடுத்த நாட்களில் பேட்டிங்கில் கடைசி 11 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்தது மோசமான உணர்வை கொடுப்பதாகவும் அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் உலக சாம்பியனை வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை இலங்கை வீணடித்துள்ளதாக தெரிவிக்கும் மஹ்ரூப் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “2 நாட்களில் 2 முறை சரிந்தது சர்வதேச தரத்திற்கு போதுமானதாக இல்லை”
இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
“உலக சாம்பியனை வீழ்த்துவதற்கு தேவையான வலுவான நிலையில் இருந்தும் நல்ல வாய்ப்புகளை வீணடித்துள்ளீர்கள். இது மோசமான உணர்வு. முதல் போட்டியில் 6 ஓவரில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள். 2வது போட்டியில் 5 ஓவரில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 3வது போட்டி ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.