IND vs NZ : முதல் போட்டியில் தடுமாறிய ஷார்துல் தாகூருக்கு பதிலாக அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரசிகர்கள் சரியான கோரிக்கை

Deepak Chahar Shardhul thakur
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்தலாக செயல்பட்டு கோப்பையை வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முதல் போட்டியில் பரிதாப தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா எஞ்சிய 2 கிரிக்கெட் போட்டிகளில் வென்றால் மட்டுமே இத்தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 306 ரன்களை குவித்து ஆரம்பத்திலேயே எதிரணியின் 3 விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியை கட்டுக்குள் வைத்திருந்த இந்தியா கடைசி 30 ஓவரில் கேன் வில்லியம்சன் – டாம் லாதம் ஆகிய ஜோடியை பிரிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது.

அபோட்டியில் சுழல் பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் விக்கெட்டுகளை எடுக்க தவறியது தோல்வியை கொடுத்தது. மறுபுறம் வேகப்பந்து வீச்சு துறையில் அறிமுகமாக களமிறங்கிய உம்ரான் மாலிக் தமக்கே உரித்தான அதிரடியான வேகத்தில் 2 விக்கெட்டை எடுத்து சிறப்பாகவே செயல்பட்ட நிலையில் மற்றொரு அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அரஷ்தீப் விக்கெட் எடுக்காமல் ரன்களையும் வாரி வழங்கினார். இருப்பினும் சமீபத்திய உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து அறிமுகமாக களமிறங்கிய அவர் 2வது போட்டியில் அசத்துவார் என்று நம்பலாம்.

- Advertisement -

தாகூருக்கு பதில்:
அந்த நிலையில் 3வது வேகப்பந்து வீச்சாளராகவும் சீனியராகவும் செயல்பட்ட ஷார்துல் தாகூர் பவர் பிளே ஓவர்களில் 1 விக்கெட்டை எடுத்து அசத்தலாக பந்து வீசினாலும் தன்னுடைய கடைசி 5 ஓவர்களில் விக்கெட் எடுக்க தவறியதுடன் ரன்களை வாரி வழங்கினார். அதற்காக தோல்வியின் பழியை அவர் மீது போட முடியாது என்றாலும் 9 ஓவர்களை வீசிய அவர் 63 ரன்களை கொடுத்து சுமாராகவே செயல்பட்டார். அறிமுகமானது முதலே அவ்வப்போது விக்கெட்டுகளை எடுக்கும் அவர் தொடர்ந்து இப்படி ரன்களை வாரி வழங்குவதாலேயே முதன்மை அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இந்நிலையில் வென்றாக வேண்டிய 2வது போட்டியில் அவருக்கு பதிலாக அவரை விட அனுபவம் வாய்ந்த தீபக் சஹாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட்டாக கருதப்படும் தீபக் சஹார் எஞ்சிய ஓவர்களிலும் பெரும்பாலான நேரங்களில் கட்டுக்கோப்புடன் பந்து வீசுபவராக அறியப்படுகிறார். அத்துடன் ஷார்துல் தாகூர் பேட்டிங் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்ட நிலையில் இவரும் கடைசி நேரங்களில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றவர் என்பதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தியதால் டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு பதில் விளையாட காத்திருந்த அவர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் துரதிஷ்டவசமாக விலகினார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவர் ஷார்துல் தாகூரை விட நல்ல பார்மிலும் இருப்பதால் வாழ்வா சாவா என்று கருதப்படும் 2வது போட்டியில் வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 9 போட்டிகளில் 180 ரன்களை 60.0 என்ற நல்ல சராசரியிலும் 15 விக்கெட்களை 6.01 என்ற சிறப்பான எக்கனாமியிலும் தீபக் சாஹர் எடுத்துள்ளார். மறுபுறம் இது வரை 16 ஒருநாள் இன்னிங்ஸில் 258 ரன்களை 25.8 என்ற சுமாரான சராசரியில் 40 விக்கெட்களை 6.45 என்ற எக்கனாமியில் ஷார்துல் தாகூர் எடுத்துள்ளார். மொத்தத்தில் அனைத்து வகையிலும் அவரை விட சிறந்து விளங்கும் தீபக் சஹர் 2வது போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.

Advertisement