கையிலேயே தங்கத்தை வெச்சுகிட்டு ஏன் அலையுறீங்க – ருதுராஜ்க்கு சிஎஸ்கே ரசிகர்கள் மெகா ஆதரவு, சென்னை நிர்வாகம் ஏற்குமா

Ruturaj
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2022 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 28ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2வது காலிறுதி போட்டியில் உத்திர பிரதேசத்தை எதிர்கொண்ட மகாராஷ்டிரா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 330/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் உத்திரபிரதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 10 பவுண்டரையும் 16 சிக்ஸர்களுடன் இரட்டை சதமடித்து 220* (159) ரன்கள் குவித்தார். குறிப்பாக சிவா சிங் வீசிய 49வது ஓவரில் நோ-பால் உட்பட 7 பந்துகளில் 7 சிக்ஸர்களை அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அதை தொடர்ந்து 331 ரன்களை துரத்திய உத்திரபிரதேச அணிக்கு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் அதிகபட்சமாக சதமடித்து 18 பவுண்டரி 3 சிக்ஸருடன் 159 (143) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கையிலேயே தங்கம்:
ஆனால் இதர வீரர்கள் மகாராஷ்டிராவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் 47.4 ஓவரிலேயே 272 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய மகாராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக ராஜவர்தன் ஹங்கரேக்கர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இது போன்ற நல்ல செயல்பாடுகளை உள்ளூர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ருதுராஜ் கைக்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அதில் துபாயில் நடைபெற்ற 2020 சீசனில் முதல் முறையாக விளையாடிய அவர் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறினார்.

அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கேப்டன் தோனி தெரிவித்த பின் கடைசி 3 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னையை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க விடாமல் ஓரளவு மானத்தை காப்பாற்றினார். ஆனால் அதற்கடுத்த 2021 சீசனில் விஸ்வரூபம் எடுத்து 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் சென்னை 4வது கோப்பை வெல்வதில் துருப்புச் சீட்டாக செயல்பட்டு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

- Advertisement -

1. அதன் காரணமாக தக்கவைக்கப்பட்ட அவர் இந்த வருடம் சுமாராக செயல்பட்டாலும் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் மிரட்டுவதால் அடுத்த வருடம் நிச்சயம் அசத்துவார் என்று சென்னை ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். ஏனெனில் 136, 154*, 124, 21, 168, 124, 40, 220 என கடைசி 8 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் ரன் மெசினாக செயல்பட்டு வரும் அவர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த வருடம் நாக் அவுட் சுற்று வரை அழைத்து வந்துள்ளார்.

2. அந்த நிலையில் 2008 முதல் காலம் காலமாக கேப்டனாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி 39 வயதை தாண்டி விட்டதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே ஓய்வு பெறும் முன் அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்த அவர் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் இந்த சீசனில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்து அவரையும் சென்னை அணியின் வெற்றியையும் கெடுத்தார்.

- Advertisement -

3. மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு கேப்டனாகவும் அசத்தி வரும் ருதுராஜ் இளம் வீரராகவும் இருப்பதால் அடுத்த 10 வருடங்களுக்கு சென்னையின் நீண்ட கால கேப்டனாக செயல்படும் திறமை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அந்த அணி ரசிகர்கள் தோனிக்கு பின் அவரை கேப்டனாக நியமிக்குமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் இந்த சீசன் மட்டுமல்லாது கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் அவரிடம் நிறைவே உள்ளது.

4. மேலும் அடுத்த தலைமுறை கேப்டனை அடுத்ததாக நடைபெறும் ஏலம் உட்பட எங்கேயும் தேடி அலையாமல் டு பிளேஸிஸை பெங்களூருவிடம் தாரை வார்த்தது போல் கோட்டை விடாமல் கையிலேயே தங்கத்தை போல் உள்ள ருதுராஜை அடுத்த கேப்டனாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

குறிப்பாக ஸ்டீபன் பிளெமிங், தோனி ஆகியோர் நினைத்தால் அவரது திறமையை மேலும் பட்டை தீட்டி வெற்றிகரமான கேப்டனாக செயல்பட வைக்க முடியும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த சரியான கோரிக்கைக்கு அந்த அணி செவிசாய்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement