- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : இன்றைய 3வது டி20 போட்டியும் 8 மணிக்கு துவங்காது, புதிய நேரத்தால் வெ.இ வாரியம் மீது ரசிகர்கள் கோபம்

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் சிறப்பாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பிய நிலையில் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் வழக்கம்போல 8 மணிக்கு துவங்குவதாக இருந்த 2-வது போட்டி வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதமானதால் 10 மணிக்கு நடைபெறும் என்று வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிவித்தது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி ஒரு நிலையா என்ற வகையில் ஆச்சரியமடைந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அந்நாட்டு வாரியத்தை கலாய்த்தார்கள்.

- Advertisement -

11 மணிக்கு:
ஆனால் அப்போதும் பொறுப்புடன் செயல்படாத அந்நாட்டு வாரியம் லக்கேஜ் வருவதற்கு மேலும் ஒரு மணி நேரம் தாமதமாகும் வகையில் நடந்து கொண்டது. அதனால் ஒருவழியாக 11 மணிக்கு துவங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா இம்முறை அந்த அணியின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் அவுட்டான நிலையில் சூரியகுமார் யாதவ் 11 (6) ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) என எஞ்சிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை மிடில் ஆர்டரில் காப்பாற்றுவார்கள் என கருதப்பட்ட ரிஷப் பண்ட் 24 (12) ஹர்திக் பாண்டியா 31 (31) ரவீந்திர ஜடேஜா 27 (30) தினேஷ் கார்த்திக் 7 (13) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டார்கள். அந்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அற்புதமாக பந்து வீசிய ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளும் ஜேசன் ஹொல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

மீண்டும் தாமதம்:
அதை தொடர்ந்து 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 8 (14), நிக்கோலஸ் பூரன் 14 (11) சிம்ரோன் ஹெட்மையர் 6 (10) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 16 ஓவர்கள் வரை அற்புதமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (52) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் தேவோன் தாமஸ் 31* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரில் 141/5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்து நிம்மதி அடைந்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியை 10 மணிக்கு துவங்கும் எனக்கூறி 11 மணிக்கு துவங்கியதால் போட்டியை பார்த்து விட்டு நேரமே உறங்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் செய்த குளறுபடிகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று நடைபெறும் 3-வது போட்டியிலும் எதிரொலிக்கிறது. ஆம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி 3-வது டி20 போட்டியும் நேற்றைய 2-வது போட்டி நடந்த அதே வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆனால் 2-வது போட்டியில் ஏற்பட்ட 3 மணி நேர தாமதத்தால் போட்டி முடிய 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடைபெறும் 3-வது போட்டிக்கு முன்பாக தூங்கி எழுந்து புத்துணர்ச்சி பெற்று பயிற்சிகளை செய்வதற்கு இரு அணி வீரர்களுக்கும் கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 9.30 மணிக்கு துவங்கும் என்று இருநாட்டு வாரியங்களும் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதனால் வீரர்களுக்கு தேவையான நேரமும் புத்துணர்ச்சியும் கிடைக்காதது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் ரசிகர்களுக்கும் நேரத்துடன் போட்டியை பார்த்து விட்டு உறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அத்தனை அவஸ்தைகளுக்கும் காரணமாகியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் மீது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -
Published by