
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் சிங் சமீபத்திய பேட்டியில் சில அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தன்னுடைய மகன் யுவராஜின் கேரியரை அழித்து விட்டதாக அவர் பகிரங்கமாக பேசினார். இல்லையேல் இன்னும் யுவராஜ் 5 – 6 வருடங்கள் விளையாடி இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால் தம்முடைய வாழ்நாளில் தோனியை எப்போதும் மன்னிக்க மாட்டேன் என்று யோகராஜ் கூறியது ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. அது போக யுவராஜை விட சுமாராக விளையாடியதால் கடந்த 1981ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் கபில் தேவ் இந்திய அணியிலிருந்து யோக்ராஜை கழற்றி விட்டார். அப்போது மேற்கொண்டு நீங்கள் எந்த உலகக் கோப்பையும் வெல்ல மாட்டீர்கள் என்று கபில் தேவுக்கு சாபமிட்டதாக யோக்ராஜ் கூறியுள்ளார்.
அதே போலவே தற்போது யுவராஜ் சிங் மொத்தம் 13 கோப்பைகளை வென்றுள்ளதாக யோக்ராஜ் கூறினார். ஆனால் கபில் தேவ் வெறும் ஒரு உலகக் கோப்பை (1983) மட்டுமே வென்றதாக அவர் மற்றொரு பகிரங்க கருத்தைத் தெரிவித்தார். இந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் யோக்ராஜிடம் பயிற்சிகளைப் பெற்று உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் அர்ஜுன் டெண்டுல்கர் தம்மைத் தவிர்த்து வேறு ஒருவரின் பயிற்சியில் வளர்ந்தால் வீணாகி விடுவார் என்று யோக்ராஜ் மற்றொரு பகிரங்க கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜீ ஸ்விட்ச் எனும் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“நிலக்கரிச் சுரங்கத்தில் நீங்கள் வைரத்தை பார்த்துள்ளீர்களா? வைரம் என்பது ஒன்றுமில்லை. அது பல வருடங்களாக வளர்த்து வடிவமைத்த நிலக்கரியே தவிர வேறில்லை. ஒருவேளை சரியான கையில் வைரம் இறங்கினால் அது தன்னுடைய இலக்கை அடையும். விலைமதிப்பற்ற பொருளாக மாறும். ஆனால் அதே வைரம் அதன் மதிப்பை புரிந்து கொள்ளாத ஒருவரிடம் இருந்தால் அது துண்டு துண்டாக உடைந்து விடும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 24 கேரட் தங்கம்.. ஆஸி அணியில் இருக்கும் பிரச்சனையை பயன்படுத்தினால் இந்தியா ஜெயிக்கலாம்.. சாஸ்திரி பேட்டி
உண்மையில் திறமையான ஒருவர் எந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதிலும் முன்னேற முடியும். பயிற்சியாளர்களைப் பொறுத்து அதில் கால வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும். எனவே இப்படிப்பட்ட கோட்பாட்டை கொண்டுள்ள யோகராஜ் சிங்கிடம் வளர்ந்தால் உங்களால் வளர முடியாது என்றும் அவரிடமிருந்து தப்பித்து வேறு பயிற்சியாளரிடம் பயிற்சிகளை எடுக்குமாறு அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.