- Advertisement -

IND vs ENG : பேசாம வேற நாட்டுக்கு விளையாட போய்டுங்க – முக்கிய வீரருக்கு நடந்த அநீதியால் ரசிகர்கள் சோகம்

சௌதாம்ப்டன் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 7-ஆம் தேதியான நேற்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிரடியான வெற்றி பெற்றது. இரவு 10.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 198/8 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரர் இஷான் கிசான் 8 (10) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரியுடன் 24 (14) ரன்களும் தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (17) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (19) ரன்கள் விளாசி அவுட்டானார்கள்.

அதைவிட மிடில் ஓவரில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதமடித்து 51 (33) ரன்கள் எடுக்க கடைசியில் அக்ஷர் பட்டேல் 17 (12) ரன்களும் தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிற்ஸ் ஜோர்டான் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 19.3 ஓவரில் 148 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்தியா முன்னிலை:
அந்த அணிக்கு அற்புதமான பார்மில் இருக்கும் புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாக டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) ஜேசன் ராய் 4 (16) என மிரட்டலான நட்சத்திர அதிரடி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவின் அனலான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து நடையை கட்டினர். அதனால் 33/4 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்தை மொய்ன் அலி – ஹரி ப்ரூக் ஆகியோர் 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடினர். இருப்பினும் சஹாலின் சுழலில் சிக்கிய மொய்ன் அலி 36 (20) ரன்களிலும் ஹரி ப்ரூக் 28 (23) ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

இறுதியில் கிறிஸ் ஜோர்டான் 26* (17) ரன்கள் எடுத்து போராடினாலும் எதிர்புறம் வந்த சாம் கரன் போன்ற வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அவுட்டானதால் ஆல் அவுட்டான இங்கிலாந்து பட்லர் தலைமையில் முதல் போட்டியிலேயே பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்துள்ள இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

சாம்சன் பரிதாபங்கள்:
முன்னதாக இப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ரசிகர்களை சோகமும் கோபமும் அடைய வைத்துள்ளது. ஏனெனில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தி 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவருக்கு கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியான வாய்ப்பு எப்போதுமே கொடுக்கப்பட்டதில்லை.

சொல்லப்போனால் கடந்த 6 வருடங்களில் 13 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பைப் பெற்ற அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட போராடிக்கொண்டே இருக்கிறார். அதில் ஒரு அங்கமாக ஐபிஎல் 2022 தொடரில் 458 ரன்களை குவித்து ஜாம்பவான் ஷேன் வார்னேவிக்கு பின் 14 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனாலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த தேர்வுக்குழு அயர்லாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் வாய்ப்பளித்தது. அதில் முதல் போட்டியில் வாய்ப்பளிக்காத இந்திய அணி நிர்வாகம் 2-வது போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்தது. அந்த பொன்னான வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் குவித்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அப்பட்டமான அநீதி:
ஆனால் அப்படி செயல்பட்ட அவருக்கு பரிசாக தற்போதைய இங்கிலாந்து டி20 தொடருக்கான முதல் போட்டியில் மட்டும் பெயருக்காக சேர்க்கப்பட்டு அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சீனியர்கள் திரும்புவதால் மனசாட்சியே இல்லாமல் கழற்றி விடப்பட்டுள்ளார். அதுகூட பரவாயில்லை, முதல் போட்டியில் தேர்வு செய்தார்களே குறைந்தது அதிலாவது வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்பதே ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது.

இதையும் படிங்க : IND vs ENG : ஜெயிச்சது ஓகே தான். ஆனா இந்த தப்பு மட்டும் மாறல – வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா வருத்தம்

இந்த அப்பட்டமான அநீதியால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் உங்களுக்கு எப்போதுமே தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை பேசாமல் உங்களது திறமையை வீணாக்காமல் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அங்கு வரவேற்க காத்திருக்கும் அணிகளுக்கு விளையாடி முன்னேறுமாறு விரக்தியில் சஞ்சு சாம்சனுக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர். ஒருவேளை தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறதா என்றும் நிறைய ரசிகர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர்.

- Advertisement -
Published by