IND vs WI : இவர்களுக்காகவா விராட் கோலியை நீக்க சொன்னிங்க, இளம் வீரர்களை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Sanju Samson Deepak Hooda
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 22-ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தனர். அந்த ஜோடியில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடி காட்டிய சுப்மன் கில் 64 (53) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்கிற்கு தவானுடன் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார். அதில் 34 ஓவர்கள் வரை நங்கூரமாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அடுத்த சில ஓவர்களில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (57) ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாக அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் 13 (14) ரன்களிலும் சஞ்சு சாம்சன் 12 (18) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

போராடிய விண்டிஸ்:
கடைசியில் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் அக்சர் படேல் 21 (21) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றியதால் 50 ஓவர்களில் இந்தியா 308/7 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் ஷாய் ஹோப் 7 (18) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தாலும் அடுத்ததாக களமிறங்கிய ப்ரூக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 2-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை சரிய விடாமல் தூக்கி நிறுத்தினார்.

இதில் ப்ரூக்ஸ் 46 (61) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் கெய்ல் மேயர்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 75 (68) ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 25 (26) ரன்களிலும் ரோவ்மன் போவல் 6 (7) ரன்களிலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அவுட்டானார்கள். அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் 54 (66) ரன்கள் எடுத்து போராடிய பிரண்டன் கிங்கும் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 33 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்ட போது எளிதாக வென்று விடும் என எதிர்பார்த்த இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா ஷெபார்ட் 39* (25) ரன்களும் விளாசி வெற்றிக்காக போராடினர்.

- Advertisement -

சொதப்பிய மிடில் ஆர்டர்:
அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய முகமது சிராஜ் தடுமாறினாலும் கச்சிதமாக செயல்பட்டு 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 305/6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியைத் சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சிராஜ், தாகூர், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு 97 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் தவான் 97, கில் 64, ஷ்ரேயஸ் 54 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங் செய்ததால் ஒரு கட்டத்தில் இந்தியா 350 ரன்களை அசால்ட்டாக தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டரில் சூரியகுமார், சாம்சன், ஹூடா ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பினிஷிங் செய்யத் தவறினர். நல்லவேளையாக பந்துவீச்சாளர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் இந்தியா தப்பியது. இல்லையேல் தோல்விக்கு நிச்சயமாக அது தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
குறிப்பாக ஏற்கனவே நியாயமான வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அரிதாகக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறி 12 ரன்களில் அவுட்டாகி தனக்கென்று நிலையான இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார். அதேபோல் சமீபத்திய அயர்லாந்து தொடரில் மட்டுமே அசத்திய தீபக் ஹூடாவும் 27 (32) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதை பார்த்த இந்திய ரசிகர்கள் இவர்களுக்காகவே விராட் கோலியை அணியிலிருந்து நீக்குமாறு விமர்சிக்கிறார்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஏனெனில் கடந்த 2019க்கு பின் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் விராட் கோலி பெரிய பெயரையும் வைத்துக் கொண்டு ரன்களையும் அடிக்காமல் வெள்ளை பந்து அணியில் இதே சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பையும் கொடுக்க விடாமல் விளையாடுகிறார் என்று நிறைய விமர்சனங்கள் சமீப காலங்களில் வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : IND vs WI : நல்லவேளை காப்பாத்திடீங்க. நீங்க இல்லனா என்ன ஆயிருக்கும் – சாம்சனை புகழும் ரசிகர்கள்

ஆனால் ஒருசில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவர்களுக்காக காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலியை நீக்குவதில் நியாயமே கிடையாது என்று தற்போது ரசிகர்களே விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement