
ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெளியேறும் தருவாயில் உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் போராடி வென்றது. இருப்பினும் மூன்றாவது போட்டியில் இலங்கையிடம் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
ஆனால் அந்தப் போட்டியில் 152 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி 20, மந்தனா 6, ஜெமிமா 16 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் தீப்தி 29, ரிச்சா 1 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்பிரீத் 54* (47) ரன்கள் எடுத்துப் போராடியதால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது முதல் பந்தில் அவர் சிங்கிள் எடுத்தார். ஆனால் அடுத்த 5 பந்துகளில் பூஜா, அருந்ததி, ஸ்ரேயங்கா, ராதா ஆகிய 4 வீராங்கனைகள் மேற்கொண்டு சிங்கிள் கூட எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. அதனால் 20 ஓவரில் 142-9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த வகையில் மீண்டும் அழுத்தமான போட்டியில் இந்திய மகளிரணி சொதப்பியது ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி பற்றி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “அந்த கடினமான பிட்ச்சில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த இந்த பெரிய இலக்கை இந்தியாவைத் தவிர்த்து வேறு எந்த அணியும் இந்தளவுக்கு நெருங்கியிருக்கக் கூட முடியாது”
“எனவே நான் வெல்டன் இந்தியா என்று சொல்வேன். மறுபடியும் ஹர்மன்ப்ரீத் ஒரு நட்சத்திரம் என்பதை காண்பித்துள்ளார்” என்று கூறினார். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இதுவே ஆடவர் அணி தோற்றிருந்தால் இப்படி பாராட்டியிருப்பீர்களா? என்று அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் ஹர்மன்ப்ரீத் நன்கு செட்டிலாகியும் கடைசி ஓவரை முழுமையாக எதிர்கொண்டு ஃபினிஷிங் செய்யவில்லை.
இதையும் படிங்க: விராட் கோலி அட்வைஸ் தான்.. ரஞ்சிக் கோப்பையில் புஜாராவை டக் அவுட்டாக்க உதவுச்சு.. தமிழ்நாடு பவுலர் பேட்டி
ஆனாலும் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் அவரை விமர்சிக்காமல் சஞ்சய் மஞ்ரேக்கர் இப்படி ஜால்ரா போல பாராட்டுவதாகவும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மொத்தத்தில் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிரணியை சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சிக்காததாலேயே இன்னும் சாதிக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை தோற்கடிக்கத் தவறினால் இந்தியா வீட்டுக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.