இது உங்க ஊர்ல நோ-பால் இல்லையா? இந்தியாவுக்காக போராடிய சாய் சுதர்சனை வீழ்த்திய அம்பயர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 352 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த சாய்ம் ஆயுப் 59 (51) ரன்களும் பஃர்கான் 65 (62) ரன்களையும் அதிரடியாக எடுத்தனர்.

அவர்களை விட மிடில் ஆர்டரில் களமிறங்கியது முதலே இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட தாயப் தாஹிர் 45 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 12 பவுண்டரி 4 சிக்ஸருடன் 108 (71) ரன்கள் விளாசி பாகிஸ்தானை வலுப்படுத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் முபாசிர் கான் 35, மும்தாஜ் 13, முகமத் வாசிம் 17* என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் பெரிய ஸ்கோர் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரியான் பராக் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அதைத்தொடர்ந்து 353 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக இதே தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை அடித்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல அடித்தளமிட்டார். ஆனால் அர்சத் இக்பால் வீசிய 9வது ஓவரில் ஷார்ட் பிட்ச்சாகி வந்த 3வது பந்தை வெள்ளைக்கோட்டில் நின்று சிக்ஸர் அடிக்க முயற்சித்த அவர் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்து 29 (28) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அந்த பந்து எதிர்பார்த்ததை விட அதிக பவுன்ஸ் ஆகி வந்ததால் நோபால் இருக்குமோ என்று கருதிய நடுவர்கள் 3வது நடுவரின் உதவியை நாடினர். அதை சோதிக்கப்பட்ட போது பாகிஸ்தான் பவுலரின் கால் வெள்ளை கோட்டுக்கு வெளியே இருந்ததால் அவுட் வாபஸ் பெறப்படும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் பவுலர் காலின் சிறிய பகுதியாவது வெள்ளைக் கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதற்கேற்றார் போல் களத்தில் இருந்த நடுவர்கள் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த சுதர்சனை நிற்குமாறு சொன்னார்கள்.

- Advertisement -

ஆனால் அது நோபால் இல்லை என்று கண்மூடித்தனமாக சொன்ன 3வது நடுவர் சாய் சுதர்சன் அவுட் என்று அறிவித்ததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த மோர்சத் அலி கான் என்பவரே 3வது நடுவராக செயல்பட்ட நிலையில் இது உங்கள் ஊரில் நோபாலா? என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த நிலைமையில் வந்த நிக்கின் ஜோஸ் நிதானமாக விளையாட முயற்சித்து 11 (15) ரன்களில் எட்ஜ் கொடுக்காத போதிலும் மீண்டும் நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட்டாகி சென்றார்.

இதையும் படிங்க:இது உங்க ஊர்ல நோ-பால் இல்லையா? இந்தியாவுக்காக போராடிய சாய் சுதர்சனை வீழ்த்திய அம்பயர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

அதனால் சற்றுமுன் வரை 104/2 ரன்கள் எடுத்து போராடி வரும் இந்தியாவுக்கு களத்தில் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 51* ரன்களுடனும் கேப்டன் யாஷ் துள் 5* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். பொதுவாகவே ஃபைனலில் 250 சேசிங் செய்வதை கடினம் என்ற நிலைமையில் இந்த போட்டியில் 353 ரன்களை துரத்தும் இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நல்ல ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கெல்லாம் சளைக்காமல் தாய் மண்ணுக்கு பெருமை சேர்க்க இளம் வீரர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement