2026 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ளதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக திலக் வர்மா, ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
அதில் டாப் ஆர்டரில் அசத்தக்கூடிய ருதுராஜ் கைக்வாட் விடப்பட்டுள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பகட்ட போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதே சமயம் சீனியர்கள் இருந்ததால் அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
பலி கிடாவான ருதுராஜ்:
இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி வரும் அவருக்கு நீண்ட நாட்கள் கழித்து கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் விராட் கோலியுடன் சேர்ந்து அசத்திய ருதுராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து அசத்தினார். இருப்பினும் அதற்கு அடுத்த தொடரிலேயே தற்போது அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் நடைபெற்று வரும் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா கேப்டனாக அவர் 38*, 124, 66 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் நல்ல ஃபார்மில் இருக்கும் ருதுராஜ்க்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கவில்லை. அதைப் பார்க்கும் ரசிகர்கள் இதற்கு மேல் ஒரு வீரர் இந்திய அணியில் விளையாட என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரசிகர்கள் அதிருப்தி:
குறிப்பாக காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் திரும்புவதால் அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. அதற்காக இந்திய அணியில் பெஞ்சில் அமரும் வாய்ப்பைக் கூட பெற முடியாமல் கழற்றி விடப்பட்டுள்ள ருதுராஜ் தொடர்ந்து பலிக் கிடாவாகி வருவதாக ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். மறுபுறம் அறிமுகமானது முதலே அவர் இந்திய அணியில் இப்படி பலமுறை கழற்றி விட்டதை அனுபவித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நியூசி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா விளையாடாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்
அதனால் இதற்காக மனம் தளராமல் தொடர்ந்து ருதுராஜ் உள்ளூரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் கதவுகளை தட்டுவார் என்று நம்பலாம். அடுத்ததாக ஐபிஎல் 2026 தொடரில் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். அந்தத் தொடரில் பெரிய ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



