நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய அணியினர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் இந்த தோல்வி தமக்கு வலியை கொடுப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
12 வருடத்தில் ஒருமுறை:
அதே சமயம் கடந்த 12 வருடங்களாக இந்தியா தொடர்ந்து சொந்த மண்ணில் வெற்றி நடை போட்டதாக அவர் தெரிவித்தார். எனவே 12 வருடத்துக்குப் பின் ஒரு தோல்வி என்பது பரவாயில்லை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்று ரோஹித் சர்மா கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோற்றோம். இந்தியாவில் நிறைய போட்டிகளில் வென்றோம்”
“மோசமான பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடிய போது நாம் ஏன் கவனம் செலுத்தவில்லை? இப்போது தான் நாம் முதல் முறையாக சரிந்துள்ளோம். 12 வருடங்களில் ஒருமுறை இது போன்ற சரிவு ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஒருவேளை 12 வருடங்களாக நாங்கள் இதே போல சரிந்து எதையுமே வெற்றி பெறவில்லையெனில் அதிகமாக கவலைப்படலாம்”
ரசிகர்கள் அதிருப்தி:
“ஆனால் சொந்த மண்ணில் அனைத்து தொடர்களையும் வென்றதால் இந்தியா மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த விமர்சனங்கள் உங்களுடைய தவறில்லை. அந்தத் தரத்திற்கு நிகராக இருக்க நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். சொந்த ஊரில் நாங்கள் தொடர்ந்து 18 தொடர்களில் வென்றோம். அப்படியானால் கடந்த 12 வருடங்களில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம் என்பதே அர்த்தம்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா? தல தோனி கொடுத்த டபுள் ட்ரீட் ஹிண்ட் பேட்டி
“நீண்ட காலம் நீங்கள் தொடர்ச்சியாக அசத்தும் போது இது போன்ற தோல்வி வரும்” என்று கூறினார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் அந்த 12 வருட வெற்றி நடையை நிறுத்துவதற்காக தான் நீங்கள் கேப்டனாக செயல்பட்டீர்களா என்று ரோகித் சர்மாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள். இந்த தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பும் கொஞ்சம் குறைந்துள்ளது.



