AUS vs SA : சச்சினை தடுத்த கேப்டன் டிராவிட் போல் 18 வருடத்துக்கு பின் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த டிக்ளேர் சம்பவம் – ரசிகர்கள் அதிருப்தி

Usman Khawaja Pat Cummins
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் பெற்ற வெற்றியால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தைப் பிடித்து பைனல் வாய்ப்பை உறுதி செய்த நிலையில் தோல்விகளை சந்தித்த தென் ஆப்பிரிக்கா 2வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சரிந்தது. அதனால் ஃபைனல் வாய்ப்பையும் கிட்டத்தட்ட கோட்டை விட்டுள்ள அந்த அணி ஜனவரி 4ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 3வது போட்டியிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறது.

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்த களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொருபுறம் நின்ற தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீல் ஸ்மித் தனது பங்கிற்கு 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தி சதமடித்து 104 ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

சச்சின் – டிராவிட் டிக்ளேர்:
அவரைத் தொடர்ந்து வந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக செயல்பட்டு 8 பவுண்டரி 1 சிக்சருடன் 70 (59) ரன்கள் குவித்து 4வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டானார். இப்படி ஆரம்பம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்ததற்கிடையே அடிக்கடி வந்த மழையாலும் போதிய வெளிச்சமின்மையாலும் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 475/4 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நின்று கொண்டிருந்த உஸ்மான் கவஜா 19 பவுண்டரி 1 சிக்சருடன் 195* (368) ரன்கள் குவித்து இரட்டை சதத்தை நெருங்கியும் மாட் ரென்ஷா 5* ரன்களிலும் இருந்தனர். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 4வது நாள் ஆட்டத்தில் தன்னுடைய இரட்டை சதத்தை அடிக்க ஆவலுடன் ஆசையுடன் உஸ்மான் கவாஜா காத்திருந்த நிலையில் மேற்கொண்டு பேட்டிங் செய்தால் வெற்றி வாய்ப்பு போய்விடும் என்று கருதிய ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக காலையில் அறிவித்தார்.

- Advertisement -

அதனால் உஸ்மான் கவாஜா ஏமாற்றமடைந்ததை விட ரசிகர்கள் அதிகமாக ஏமாற்றத்தை சந்தித்தனர். ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரை வென்ற நிலையில் அதிரடியாக விளையாடக் கூடிய அவர் விரைவில் இரட்டை சதமடியுங்கள் என்று சொல்லியிருந்தால் ஓரிரு ஓவரிலேயே நிச்சயம் 5 ரன்களை விரைவாக அடித்து இரட்டை சதமடித்திருப்பார் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் அணியின் நலன் கருதி ஆஸ்திரேலிய கேப்டன் எடுத்த முடிவால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிக்ளேர் செய்த காரணத்தால் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை தவற விட்ட முதல் வீரர் என்ற பரிதாபத்திற்கு உஸ்மான் கவாஜா சொந்தக்காரராகியுள்ளார்.

இந்த சமயத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194* ரன்களில் இருந்த போது இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளேர் செய்தது தான் இந்திய ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. இருப்பினும் அதற்கு முன்பே சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதமடித்திருந்தார். ஆனால் உஸ்மான் கவாஜா இதுவரை இரட்டை சதமடித்ததில்லை. மொத்தத்தில் 2004க்குப்பின் 18 வருடங்கள் கழித்து ஒரு பேட்ஸ்மேன் 190களில் இருக்கும் போது டிக்ளேர் செய்த நிகழ்வு ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுள்ளது.

- Advertisement -

இந்த 2 நிகழ்வுகளுக்கு முன்பாக வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1960ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரான்க் வோரல் 197* ரன்களில் இருந்த போது கேப்டன் கேரி அலெக்சாண்டர் அதிரடியாக டிக்ளேர் செய்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு டீன் எல்கர் 15, எர்வீ 18, க்ளாசீன் 2, பவுமா 35, ஜோண்டோ 39, கெய்ல் வெரின் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க2011 உ.கோ கம்பீர் மாதிரி 2023 உலக கோப்பையை விராட் கோலி வென்று கொடுப்பார் – 2011 உ.கோ தேர்வுக்குழு தலைவர் உறுதி

அதனால் 4வது நாள் முடிவில் 149/6 என சரிந்து தோல்வியை தவிர்க்க போராடும் தென்னாப்பிரிக்காவுக்கு களத்தில் மார்கோ யான்சென் 10*, ஹார்மர் 6* ரன்களுடன் உள்ள நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தைரியமாக டிக்ளர் செய்த பட் கமின்ஸ் 3* விக்கெட்கள் எடுத்துள்ளார்.

Advertisement