துலீப் கோப்பை : சாய் கிஷோர் கலக்கல் ஃபினிஷிங் – வடக்கு அணியின் மிகவும் கேவலமான திட்டத்தை உடைத்த தெற்கு அணி

- Advertisement -

இந்தியாவின் பிரபல துலீப் கோப்பை 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பிளே ஆஃப் சுற்றில் அசத்திய வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் ஆகிய அணிகள் மோதிய முதல் அரையிறுதி கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று பெங்களூருவில் இருக்கும் புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வடக்கு மண்டலம் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 49 (52) ரன்கள் எடுக்க தெற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக வித்வாத் கவரேப்பா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து தெற்கு மண்டலமும் முடிந்தளவுக்கு போராடியும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 195 ரன்களுக்கு சுருண்டது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மயங் அகர்வால் 76 ரன்களும் திலக் வர்மா 46 ரன்களும் எடுக்க மேற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, கேப்டன் ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

வடக்கு அணியின் கீழ்த்தரம்:
அதைத் தொடர்ந்து 3 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வடக்கு அணி முடிந்தளவுக்கு போராடியும் 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 63 ரன்கள் எடுக்க தெற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் 5 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற கடைசி நாளில் 215 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தெற்கு அணிக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாக செயல்பட்ட சாய் சுதர்சன் 17 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சமர்த் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபுறம் அசத்திய மயங் அகர்வால் மீண்டும் 54 (57) ரன்கள் குவித்து அவுட்டாக கேப்டன் ஹனுமா விகாரி 43 (42) ரிக்கி புய் 25 திலக் வர்மா 25 (18) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இலக்கை வேகமாக எட்டும் முயற்சியில் அதிரடியாக விளையாடி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து அழுத்தத்தை ஏற்படுத்தினர். போதாகுறைக்கு மதியத்திற்கு மேல் மழை வந்ததால் அப்போட்டியில் வடக்கு மண்டலம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டது.

- Advertisement -

அதாவது ரஞ்சிக் கோப்பை போன்ற இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் யார் முன்னிலை பெற்றார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்பது விதிமுறையாகும். அந்த வகையில் இப்போட்டி ட்ராவில் முடிந்தால் 3 ரன்கள் முன்னிலை பெற்ற வடக்கு அணி வெல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் வருண பகவான் வழி விட்டதால் பேட்டிங்கை துவங்கிய தெற்கு மண்டலத்திற்கு எதிராக வடக்கு மண்டலம் மிகப்பெரிய கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டது.

குறிப்பாக மழையால் பெரும்பாலான நேரங்கள் முடிந்து விட்டதால் கடைசி ஒரு மணி நேரத்தை எப்படியாவது கடத்த வேண்டும் என்று நினைத்த வடக்கு அணியினர் விக்கெட்டை எடுப்பதில் கவனம் செலுத்தாமல் மெதுவாக பந்து வீசி நேரத்தை கழித்தார்கள். அதிலும் வெற்றிக்காக யோசித்துப் பந்து வீசுகிறோம் என்ற பெயரில் ஆஸ்கர் விருதை வெல்லும் நடிப்பை வெளிப்படுத்திய அந்த அணியினர் மழை நின்றதும் 5.3 ஓவர்களை வீசுவதற்கு 53 நிமிடங்கள் எடுத்து வேண்டுமென்ற நேரத்தை வீணடித்து ட்ராவை நோக்கி போட்டியை எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

அதற்கிடையே வாஷிங்டன் சுந்தர் 2, சசிகாந்த் 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் வந்த தமிழக வீரர் சாய் கிஷோர் வடக்கு கேப்டன் ஜெயந்த் யாதவ் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு 15* (11) ரன்களுடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து நேர்மையுடன் தெற்கு அணியை வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க:இந்தியாவால் முடியாததை சாதித்த ஆப்கானிஸ்தான்- வங்கதேசத்தை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி சரித்திர சாதனை வெற்றி

மறுபுறம் விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் முயற்சியை கைவிட்டு நேர்மைக்கு புறம்பாக நேரத்தை வீணடித்து வெற்றி பெறலாம் என்று நினைத்த வடக்கு அணியை சமூக வலைதளங்களில் டோட்டா கணேஷ் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement