கத்துக்குட்டிகளை அடித்து காலத்தை தள்ளும் ராகுல் – அதிரடியாக நீக்குமாறு ரசிகர்கள் போர்க்கொடி, அதிர்ச்சி புள்ளிவிவரம் இதோ

KL Rahul Lungi Nigidi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை சுவைத்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற வலுவான இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்யாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா இந்த உலகக் கோப்பையிலிருந்து பரிதாபமாக வெளியேறியது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. புகழ் பெற்ற அடிலைட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 168/8 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 50 (40) ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய ஹர்திக் பாண்டியா 63 (33) ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலிருந்தே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அலெக்ஸ் ஹெல்ஸ் – கேப்டன் ஜோஸ் பட்லர் ஜோடி 16 ஓவரிலேயே 170/0 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் பைனலில் பாகிஸ்தான எதிர்கொள்ள இங்கிலாந்து தகுதி பெற்றது.

- Advertisement -

மோசமான ராகுல்:
இந்த தோல்விக்கு மோசமான பவுலிங் ஒரு காரணமாக அமைந்தது என்றாலும் எதிரணி 170 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி வெறும் 30 ரன்கள் கூட எடுக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷின், க்ளாஸ் பேட்ஸ்மேன் என முன்னாள் வீரர்களும் கேப்டனும் பயிற்சியாளர்களும் ஆகா ஓகோ என புகழும் கேஎல் ராகுல் இந்த முக்கிய போட்டியில் வெறும் 5 (5) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அவர் 2019 உலகக்கோப்பையில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்று அவரையும் மிஞ்சும் வகையிலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடித்தார்.

அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்துக்கு எகிறியது. அதனால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்தை பெற்றுள்ள அவர் சமீப காலங்களில் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் ஒன்று ஆரம்பத்திலேயே தடவி அவுட்டாவது அல்லது பெரிய ரன்களை குவித்தாலும் தோல்வியை பரிசளிக்கும் வகையில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021 டி20 உலக கோப்பை மற்றும் 2022 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிகள் வரை பெரிய அணிகளுக்கு எதிராக தடுமாறும் அவர் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக பெரிய ரன்களைக் குவித்து காலத்தை தள்ளி வருவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தார்கள்.

- Advertisement -

1. அதற்கு மற்றுமொரு ஆதாரமாய் தன்னுடைய கேரியரில் இதுவரை அவர் விளையாடியுள்ள 2021, 2022 ஆகிய 2 டி20 உலக கோப்பைகளில் முறையே 3 (8), 18 (16), 69 (48), 50 (19), 54* (36), 4 (8), 9 (12), 9 (14), 50 (32), 51 (35), 5 (5) என 322 ரன்களை எடுத்துள்ளார்.

2. ஆனால் அந்த ரன்களில் 69, 50, 54, 50, 51 என அவர் அடித்த பெரிய ரன்கள் முறையே ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா, வங்கதேசம், ஜிம்பாப்வே என கத்துக்குட்டி அணிகளுக்காக அடித்துள்ளார் என்பது அதிர்ச்சியை கொடுக்கிறது. இதர குறைவான ரன்களை முறையே பாகிஸ்தான், நியூசிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து என பெரும்பாலும் வலுவான அணிகளுக்கு எதிராக எடுத்து சொதப்பியுள்ளார்.

அப்படி கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே அடிப்பவர் என்று பெயரடுத்த அவர் ஐபிஎல் 2022 தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரிலும் ஆசியக் கோப்பையிலும் இந்த உலகக் கோப்பையிலும் ஹாங்காங், நெதர்லாந்து போன்ற கத்துக் குட்டிகளிடம் கூட திணறினார்.

அதனால் இவரை விட மோசமான சுயநலமான வீரர் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இப்படியே கத்துக்குட்டிகளை அடித்து பெரிய பெயரை எடுத்து இந்திய அணியில் காலத்தை தள்ளி வருவதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இவரை அணியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு அடுத்த தலைமுறை அதிரடி தொடக்க வீரரை உருவாக்குமாறு ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள்.

Advertisement