ENG vs RSA : மோர்கன் போனதும் பூனையாக மாறிய முரட்டு இங்கிலாந்து – தொடர் தோல்விகளால் கலாய்க்கும் ரசிகர்கள்

ENg vs RSA jason roy
Advertisement

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அங்கு 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து அடுத்ததாக துவங்கிய டி20 தொடரிலும் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமனடைந்தது.

Rilee Rossouw

அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது ஜூலை 31-ஆம் தேதியான நேற்று இரவு ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய ரீலி ரோசாவ் மற்றொரு தொடக்க வீரர் ஹென்றிக்ஸ் உடன் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பிய இங்கிலாந்து:
அந்த நிலைமையில் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் 3-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மேலும் வலுப்படுத்தி 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து 70 (50) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தனது பங்கிற்கு 5 பவுண்டரி பறக்கவிட்ட மார்க்ரம் 51* (36) ரன்கள் எடுக்க கடைசியில் டேவிட் மில்லர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (9) ரன்களும் ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் 8 (4) ரன்களும் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்கா 191/5 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 192 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் 14 (10) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த ஜேசன் ராய் 17 (18) ரன்களில் நடையை கட்டினார். அதனால் சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 27 (30), மொயீன் அலி 3 (5), லியாம் லிவிங்ஸ்டன் 3 (7), சாம் கரண் 9 (8) என மிடில் ஆரிடரில் வந்த முக்கிய வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதனால் 16.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து 90 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

புலியும் பூனையும்:
பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை முத்தமிட்டது. முன்னதாக இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டி20 தொடருக்கு முன்பாக சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக 2015இல் இதேபோல் தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்துக்கு தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து அதிரடியாக விளையாடும் யுக்தியை கற்றுக்கொடுத்து 2019 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் திடீரென 35 வயதிலேயே ஓய்வு பெற்றார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

அந்த நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்களை தெறிக்கவிட்டு ஆரஞ்சு தொப்பியை வென்று அதன்பின் நடந்த நெதர்லாந்து ஒருநாள் தொடரில் அந்த அணியை சரமாரியாக அடித்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரிலும் 2 – 1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

- Advertisement -

அதற்கிடையே மற்றொரு நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் இதுவரை ஒரு தொடரை கூட வெல்ல முடியவில்லை. மொத்தத்தில் கேப்டன் மோர்கன் போனபின்பு பங்கேற்ற 4 தொடர்களில் இதுவரை ஒரு தொடரை கூட இங்கிலாந்து வெல்லவில்லை.

இதனால் மோர்கன் போனதும் அவருடன் சேர்ந்து அதிரடியும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவதும் காணாமல் போய்விட்டதை போல அவர் இல்லாத நிலைமையில் அவர் கண்டறிந்த அதே பட்லர், ராய், மொய்ன் அலி, பேர்ஸ்டோ போன்ற முரட்டுத்தனமான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து பூனையாக செயல்படுவது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

அதுவும் சொந்த மண்ணில் பிளாட்டான பிட்ச்களிலேயே இந்த அளவுக்கு திணறுவதால் 2015க்கு முன்பாக தடுமாறிக் கொண்டிருந்த அதே இங்கிலாந்து மீண்டும் பிறந்துள்ளதாக இதர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வகை வகையாக கலாய்க்கின்றனர். மேலும் ஜோஸ் பட்லர் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement