குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பியுள்ள இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 29-ஆம் தேதியான நேற்று இரவு 8 மணிக்கு டிரினிடாட் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190/6 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 (16) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 14 (12), ஹர்திக் பாண்டியா 1 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான ஏமாற்றினாலும் மறுபுறம் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மாஸ்:
அந்த சமயத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 16 (13) ரன்களில் அவுட்டானதால் 150 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* ரன்கள் குவித்து 13* (10) ரன்கள் எடுத்த அஸ்வினுடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவைக் காப்பாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர்கள் கெய்ல் மேயர்ஸ் 15 (6) சமர் ப்ரூக்ஸ் 20 (15) என அதிரடியான ரன்களை எடுத்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினார்.
அந்த நிலைமையில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் காப்பாற்ற வேண்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 (15), ரோவ்மன் போவல் 14 (17), சிம்ரோன் ஹெட்மையர் 14 (15) என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 122/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அளவுக்கு அதிரடியாகவும் அபாரமாக பந்து வீசிய இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், அஷ்வின் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
எச்சரிக்கையும் பல்ப்பும்:
அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே அசத்த துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான 2-வது தர இளம் இந்திய அணியிடம் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய வெஸ்ட் இண்டீஸ் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் அவமானத்தைச் சந்தித்தது.
அந்த நிலையில் தங்களுக்கு மிகவும் பிடித்த டி20 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அந்த அணி தயாரானது. மேலும் எப்போதுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வலுவான அணியாக இருந்து வருகிறது. அதனாலேயே உலகிலேயே அதிகபட்சமாக 2 டி20 உலகக் கோப்பைகளை வென்ற அணியாகவும் வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது.
அதற்கு உதவும் வகையில் சிம்ரோன் ஹெட்மையர் போன்ற ஒருசில அதிரடி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைக்கப்பட்டனர். அதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து கற்ற பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடித்து பழி தீர்ப்போம் என்று தொடர் துவங்குவதற்கு முன்பாக நேற்று நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் இந்தியவை எச்சரித்திருந்தார்.
ஆனால் வாய் வார்த்தையாக பேசிய அவரும் அவரது அணியும் களத்தில் அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் வெற்றி பெறும் அளவுக்கு செயல்படாமல் சுமாராகவே செயல்பட்டனர். அதுவும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மேலும் சில முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியிடம் மீண்டும் மண்ணை கவ்விய அந்த அணியை பார்த்த ரசிகர்கள் டி20 தொடரில் இந்தியாவை புரட்டி எடுப்போம் என்று சொன்னீர்களே என்னாச்சு என்ற வகையில் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.



