IND vs SL : பாராட்டி தானே ஆகணும் வேற வழி, இந்தியாவை காப்பாற்றிய ராகுலை பாராட்டிய முன்னாள் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதியன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மிட்சேல் மார்ஷ் அதிரடியாக 81 (65) ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 129/2 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் அவர் அவுட்டானதும் ஜோஸ் இங்லிஷ் 8, கிளன் மேக்ஸ்வெல் 8, கேமரூன் கிரீன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா ஆஸ்திரேலியாவை வெறும் 188 ரன்களுக்கு அடக்கியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 189 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 3, விராட் கோலி 4, சூரியகுமார் யாதவ் 0, சுப்மன் கில் 20, கேப்டன் பாண்டியா 25 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பாராட்டி தானே ஆகணும்:
அதனால் 83/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய கேஎல் ராகுல் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 75* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 45* ரன்களும் எடுத்து காப்பாற்றினர். அதனால் தப்பிய இந்தியா 39.5 ஓவரில் 191/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு ஆல்ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றாலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட நல்ல பார்மில் இருக்கும் வீரர்களே தடுமாறிய கடினமான பிட்ச்சில் நங்கூரமாக நின்று 75* ரன்கள் குவித்த கேஎல் ராகுல் இந்தியாவை காப்பாற்றி அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக வெற்றி பெற வைத்தார் என்றே சொல்லலாம். முன்னதாக 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் நாளடைவில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதனால் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவர் தற்போது விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். அந்த இடத்தில் சமீபத்திய இலங்கை தொடரின் ஒரு போட்டியில் இதே போல் வெற்றி பெற வைத்த அவர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஓப்பனிங் வீரராக சொதப்பியதால் மீண்டும் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்தார்.

குறிப்பாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் புள்ளி விவரங்களுடன் சரமாரியாக 2 வாரங்கள் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்தது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. சொல்லப்போனால் அவரது விமர்சனங்களால் டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த ராகுல் கடைசி வாய்ப்பாக ஒருநாள் அணியில் பெற்றுள்ள இந்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டு அழுத்தத்திற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வளைந்து கொடுக்காமல் இந்தியாவை வெற்றிபெற வைத்து தன்னை கிளாஸ் நிறைந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அதனால் நேற்று வரை விமர்சித்த பெரும்பாலான ரசிகர்கள் எங்களை மன்னித்து விடுங்கள் என்று வெளிப்படையாகவே ராகுலை பாராட்டி வருகிறார்கள். அவர்களைப் போலவே தாறுமாறாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத் முதல் ஆளாக அதே ட்விட்டரில் ராகுலை வெளிப்படையாக மனதார பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:நேதன் லயனை விட அவர் 15 மடங்கு சிறந்த ஸ்பின்னர், பெரிய அளவில் வருவாரு – இளம் ஆஸி வீரரை மனதார பாராட்டிய அஷ்வின்

அதை பார்க்கும் ரசிகர்கள் பாராட்டி தானே ஆகணும் உங்களுக்கு வேறு வழியும் இல்லை என்று வெங்கடேஷ் பிரசாத்தை கலாய்த்து வருகிறார்கள். அத்துடன் வெளியே பாராட்டினாலும் உள்ளுக்குள் கேஎல் ராகுல் அசத்தலாக செயல்பட்டதை நினைத்து வெங்கடேஷ் பிரசாத் குமுறுவதாகவும் நிறைய ரசிகர்கள் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement