மனசுல தோனினு நினைப்பா – ராஜஸ்தான் தோல்வியால் நியாயமான காரணத்துடன் இளம் வீரரை விளாசும் ரசிகர்கள்

Riyan Parag 56.jpeg
- Advertisement -

கடந்த 65 நாட்களாக 10 அணிகளுடன் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக இந்தியாவிலேயே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மே 29-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை முத்தமிட்டு வரலாறு படைத்தது.

அந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்ற போதிலும் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 39 (35) ரன்களை எடுத்தார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் மாஸ் காட்டி வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்த குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் சொதப்பல்:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சஹா 5 (7) மேத்தியூ வேட் 8 (10) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கியமான 34 (30) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகாமல் 45* (42) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மிரட்டிய டேவிட் மில்லர் 32* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவர்களில் 133/3 ரன்களை எடுத்த குஜராத் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

மறுபுறம் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து பைனலுக்கு முன்னேறிய பொன்னான வாய்ப்பில் டாஸ் வென்ற போதிலும் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2-வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த அணியின் இந்த தோல்விக்கு பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் பல குளறுபடிகள் செய்ததே முக்கிய காரணமாகும். குறிப்பாக ஜெய்ஸ்வால் 22 (16) ரன்களை விளாசி ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பின்றி 14 (11) ரன்களில் அவுட்டானார். அதைவிட தேவ்தூத் படிக்கல் 2 (10) ரன்களுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி அவுட்டானது பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் சிம்ரோன் ஹெட்மயர் 11 (12) அஷ்வின் 6 (9) ஆகியோரும் பெரிய ரன்கள் அடிக்காமல் கைவிட்டனர்.

- Advertisement -

பராக் சொதப்பல்கள்:
அதனால் 98/6 சுருண்ட அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய 20 வயது இளம் வீரர் ரியான் பராக் 15 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவரின் பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள் என்றே கூறலாம். ஏனெனில் அந்த சமயத்தில் ஒரு இளம் வீரராக அதிரடியாக விளையாடுவது கடினம் என்றாலும் ஒன்று அதிரடி காட்ட வேண்டும் அல்லது சிங்கிள் எடுக்க வேண்டும். ஆனால் முஹம்மது ஷமி வீசிய கடைசி கட்ட ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தாலும் 1 ரன் எடுக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் எதிர்ப்புறம் எந்த பேட்ஸ்மேனும் இல்லை என்பதால் அவர் சிங்கிள் எடுக்கவில்லை. ஆனால் எதிர்ப்புறம் இருந்த ட்ரெண்ட் போல்ட் 1 சிக்சர் உட்பட 11 (7) ரன்களும் ஓபேத் மெக்காய் 1 சிக்சர் உட்பட 8 (5) ரன்களும் எடுத்தனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் “மனதில் என்ன தோனினு நினைப்பா” என சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். ராஜஸ்தான் அணியில் கடந்த 2019 முதல் பேட்ஸ்மேன் என்ற பெயரில் இருந்து வரும் அவர் இதுவரை 37 இன்னிங்ஸ்சில் 522 ரன்களை 16.84 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். 4 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் மோசம் கிடையாது. ஆனாலும் இந்த வயதிலேயே என்னமோ விராட் கோலியை போல் உலக சாதனை படைத்தது போல் ட்விட்டரில் அடிக்கடி கர்வமாக திமிராக பேசுவதுதான் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் தமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத அம்பயர்களை கலாய்த்தது, அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் போன்ற ஜாம்பவான்களை மறைமுகமாக ஏளனமாய் பேசியது என இந்த வருடம் அவரின் கர்வமான திமிர் நிறைந்த சேட்டைகள் உச்ச கட்டத்தை எட்டின. அதனால் இதுபோன்று வாய் மட்டும் பேசாமல் களத்தில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வெற்றி கொடுத்து விட்டு பேசுங்கள் என்று ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement