இப்டியே போன கேரியர் முடிஞ்சுடும் ! கடைசி ஓவரில் சொதப்பிய இளம் பவுலரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பந்துவீச்சாளர்களின் நிலைமை படாத பாடாக உள்ளது. இதில் எத்தனையோ பவுலர்கள் நிறைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசில போட்டிகளில் அதுவும் ஒரே ஓவரில் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கி ரன்களை வாரி வழங்கி அத்தோடு காணாமல் போனதையும் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு மீண்டும் ஒரு இளம் இந்திய பந்துவீச்சாளர் வந்துள்ளதை பற்றி பார்ப்போம். ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் மே 24-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின.

Jos Buttler 89

- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188/6 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் சஞ்சு சாம்சன் 47 (26) தேவ்தூத் படிக்கல் 28 (20) ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

ராஜஸ்தான் தோல்வி:
இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர், ரியன் பராக் ஆகியோர் தலா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் ஆரம்பம் முதலே தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக நின்று அசத்திய ஜோஸ் பட்லர் சமீபத்திய போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் எடுக்க தவறினாலும் இந்த முக்கியமான போட்டியில் ஆரம்பத்தில் மெதுவாக பேட்டிங் செய்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக 12 பவுண்டரி 2 சிக்சருடன் 89 (56) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 189 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு முதல் ஓவரிலேயே ரித்திமான் சாஹா டக் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ வேட் மற்றும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை ஈடு செய்தார்கள்.

Miller 2

இருப்பினும் மிடில் ஓவரில் இந்த இருவருமே தலா 35 ரன்களில் ஆட்டமிழக்க 85/3 என தடுமாறிய குஜராத்தை அடுத்து களமிறங்கி நங்கூரமாக நின்று அதிரடி காட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி உட்பட 40* (27) ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடியாக நின்ற டேவிட் மில்லர் அவரைவிட அதிரடியாக 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்ததால் 19.3 ஓவரில் 191/3 ரன்களை எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சொதப்பிய பிரசித்:
இந்த வெற்றியால் தனது முதல் வருடத்திலேயே முதல் அணியாக குஜராத் நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்த ராஜஸ்தான் பந்துவீச்சில் கோட்டை விட்டு தோல்வியடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பாக எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் மோத உள்ளது.

இந்த வெற்றிக்கு 68 ரன்கள் குவித்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதை இளம் இந்திய பந்துவீச்சாளர் பிரஸித் கிருஷ்ணா வீசிய நிலையில் கொஞ்சம் கூட கருணை காட்டாத மில்லர் முதல் 3 பந்துகளிலும் வரிசையாக முரட்டுத்தனமான சிக்சர்களை பறக்கவிட்டு ஹாட்ரிக் சிக்சருடன் வெற்றி பெற வைத்தார். இதனால் பல ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில் கடைசி ஓவரில் 16 ரன்கள் என்பது கட்டுப்படுத்தக் கூடிய நல்ல ரன்கள் என்ற சூழ்நிலையில் அவரை நம்பி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச அழைத்தார்.

கேரியர் முடிஞ்சுடும்:
ஆனால் அந்தப் பொறுப்பை கொஞ்சம் கூட உணராத அவர் வித்தியாசமாக புதிதாக ஏதேனும் பந்து வீசலாம் என்று முயற்சிக்காமல் வழக்கம் போல சாதாரணமாக வீசியதை பயன்படுத்திய மில்லர் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு போட்டியை முடித்தார். 3 சிக்சர்களை கொடுத்து தோற்றது கூட பரவாயில்லை ஆனால் இப்படிப்பட்ட முக்கியமான பிளே ஆஃப் போட்டியில் கடைசி ஓவரில் இளம் வீரராக இருந்து கொண்டு கொஞ்சம் கூட போராடாமல் மோசமாக பந்து வீசியது தான் கோபமடைய வைக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

வெற்றி பெறவில்லை என்றாலும் குறைந்தது 5, 6 பந்து வரையாவது போட்டியை எடுத்து வந்து போராடியிருக்கலாமே என்று கூறும் ரசிகர்கள் இப்படியே மோசமாக பந்து வீசினால் உங்களின் கிரிக்கெட் கேரியர் காணாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கின்றனர். கடந்த வருடங்களில் கொல்கத்தாவுக்கு வெறும் 20 லட்சத்துக்கு விளையாடிய அவர் இதுபோல ஓரளவு சுமாராக பந்து வீசினாலும் இம்முறை ராஜஸ்தான் 10 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து நம்பி வாங்கியது. அந்த நிலைமையில் இதுவரை 15 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 8.36 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

Advertisement