கொஞ்சமும் திருந்ததா பாகிஸ்தான், தார் ரோட் பிட்ச்சில் மீண்டும் வாங்கிய முரட்டு அடி – கலாய்க்கும் முன்னாள் வீரர்கள் ரசிகர்கள்

Pakistan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவில்பிண்டி நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி – பென் டன்கட் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே டி20 இன்னிங்ஸ் விளையாடினர்.

இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணியாக போற்றப்படும் பாகிஸ்தானின் பவுலர்களை அதன் சொந்த மண்ணிலேயே லோக்கல் பவுலர்களைப் போல வெளுத்து வாங்கிய அந்த ஜோடி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு சதமடித்து 35.4 ஓவர்களிலேயே 233 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் பென் டன்கட் 15 பவுண்டரியுடன் 107 (110) ரன்களில் அவுட்டாக அடுத்து சில ஓவர்களில் ஜாக் கிராவ்லி 21 பவுண்டரியுடன் 122 (111) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

தார் ரோட்:
அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 23 (31) ரன்களில் அவுட்டானாலும் அவருடன் களமிறங்கிய மற்றொரு வீரர் ஓலி போப் தனது பங்கிற்கு 14 பவுண்டரியுடன் 108 (104) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய அண்டர்-19 இளம் வீரர் ஹரி ப்ரூக் உணவு இடைவெளியில் தெம்பாக சாப்பிட்டு வந்து ஏற்கனவே சோர்ந்து போன பாகிஸ்தான் பவுலர்களை கருணையின்றி மேலும் சரமாரியாக அடித்தார். குறிப்பாக ஒரே ஓவரில் 6 பவுண்டர்களை பரக்க விட்ட அவர் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 101* (81) ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 34* (15) ரன்களும் எடுத்ததால் 75 ஓவரில் இங்கிலாந்து 506/4 ரன்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இருப்பினும் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்களை கடந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தது. முன்னதாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அதிரடிப்படையாக மாற்றியுள்ளது. ஆனால் இதற்கு முன் சொந்த மண்ணில் மட்டுமே மிரட்டிய அந்த அணி தற்போது வெளிநாட்டிலும் அடித்து நொறுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் பவுலர்கள் சுமாராக செயல்பட்டார்கள் என்று சொல்வதை விட பிட்ச் படுமோசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கை போன்ற சுழலுக்கு சாதகமான நாடுகளில் கூட முதல் நாளன்றே பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குத் தான் கைகொடுக்கும். ஆனால் இப்போட்டி நடைபெற்ற ராவல்பின்டி மைதானத்தில் முதல் நாளன்றே ஹாரீஸ் ரவூப் போன்ற தரமான பவுலர்களுக்கு கூட வேகம், பவுன்ஸ் என எதையுமே வெளிப்படுத்தி கை கொடுக்காத பிட்ச் தார் ரோடு போல ஒரே சீராக இருந்தது. அதை பயன்படுத்தி டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் உலக சாதனை படைக்கும் அளவுக்கு தெறிக்க விட்டார்கள்.

முன்னதாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மண்ணில் 24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா விளையாடிய போதும் இதே போல் தார் ரோடு போன்ற பிட்ச் அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இதே போல் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கியதால் கராச்சி மைதான பிட்ச் மோசமாக இருந்ததாக மதிப்பீடு வழங்கிய ஐசிசி 1 கருப்பு புள்ளியையும் கொடுத்தது.

அதன் பின் மீண்டும் தற்போது பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் இந்த தொடரிலும் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் மீண்டும் அதே போல் இந்த தார் ரோடு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் ரசிகர்களும் அமித் மிஸ்ரா போன்ற முன்னாள் வீரர்களும் அடி வாங்கியும் திருந்தாத உங்களுக்கு இது தேவை தான் என்று பாகிஸ்தானை கலாய்க்கிறார்கள். மேலும் நாளை இங்கிலாந்து 1000 ரன்கள் தொட்டு பாகிஸ்தானுக்கு மேலும் அடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement