
பாகிஸ்தானுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் தார் ரோட் போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச் காரணமாக டிராவில் முடிந்தன. இதனால் யாருமே வெற்றி பெறாமல் சமநிலையில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது போட்டி லாகூரில் கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியா அதிரடி:
இதை அடுத்து தனது பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவிற்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 8/2 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை அடுத்து ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.
இதில் 91 ரன்களில் அவுட்டான உஸ்மான் கவாஜா சதத்தை நழுவ விட்ட நிலையில் அவருடன் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்களில் அவுட்டானர். அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் கிறிஸ் க்ரீன் 79 ரன்களும், அலெஸ் கேரி 67 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
மிரட்டிய கமின்ஸ் – ஸ்டார்க்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 11 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த ஆசாத் ஷபிக் மற்றும் அசார் அலி ஆகியோர் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை தாங்கிப் பிடித்தனர். இதில் அசாத் ஷபிக் 81 ரன்களும் அசார் அலி 76 ரன்களும் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் பாபர் பொறுப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருந்ததால் 248/3 என்ற நல்ல நிலையில் பாகிஸ்தான் பயணித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் விஸ்வரூபம் எடுத்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துகள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பட் கம்மின்ஸ் ஆகியோர் ஒன்றாக ஜோடி சேர்ந்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள் என்றே கூறலாம். ஏனெனில் ஒருபுறம் பாபர் அசாமை அப்படியே நிற்க வைத்து விட்டு மறுபுறம் வந்த பாவத் ஆலம் 13, முஹம்மது ரிஸ்வான் 1, ஷடாப் கான் 6 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார்கள்.
இதனால் 248/3 என நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் திடீரென 268/6 என தடுமாறியது. அப்போதும் கருணை காட்டாத ஆஸ்திரேலிய பவுலர்கள் கேப்டன் பாபர் அசாமை 67 ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த நளமன் அலி, ஹசன் அலி, நஸீம் ஷா ஆகிய கடைசி 3 பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து டக் அவுட் செய்து மிரட்டினார்கள். இதனால் 268/6 என இருந்த பாகிஸ்தான் அதற்குமேல் 1 ரன் கூட எடுக்க முடியாமல் 268 ரன்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது பாகிஸ்தான் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சி அடைய வைத்தது. ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய கேப்டன் பட் கமிண்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இது தாங்க ஒரிஜினல் கலர்:
இதனால் 123 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு வருகிறது. தற்போதைய நிலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் கடைசி 5 விக்கெட்கள் வெறும் 4 ரன்களுக்குள் விழுந்தன.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கடைசி 5 விக்கெட்டுக்கு வெறும் 5 ரன்களை கூட எடுக்க முடியாமல் பரிதாப சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் பாகிஸ்தானின் கடைசி 5 விக்கெட்டுகள் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதோ:
1. 4 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, லாகூர், 2022*
2. 5 ரன்கள் – தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், 2003.
3. 7 ரன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிரிஸ்பேன், 1995.
மொத்தத்தில் இந்த போட்டியில் கையிலிருந்த வெற்றியை எதிரணிக்கு ஏறக்குறைய பரிசளித்துள்ள பாகிஸ்தானை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். பொதுவாகவே ஒரு வலுவான அணியை ஒரு நாளில் அதிரடியாக சாய்க்கும் பாகிஸ்தான் அடுத்த நாளில் ஒரு கத்துக்குட்டியிடம் மோசமாக விளையாடி தோல்வியடையும் ஒரு அணியாக இருப்பதால் அந்த அணியை பல வல்லுனர்களும் “கணிக்க முடியாத பாகிஸ்தான் (அன்ப்ரெடிக்டபிள் பாகிஸ்தான்)” என அழைப்பதுண்டு. அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் முக்கியமான 3-வது போட்டியில் இப்படி சொதப்பியதை பார்த்த ரசிகர்கள் “இது தான் பாகிஸ்தானின் ஒரிஜினல் கலர்” என விதவிதமாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.