62 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நேர்ந்த பரிதாபம், மீண்டும் நொறுங்கிய பாகிஸ்தானின் உ.கோ கனவு – காலாய்க்கும் ரசிகர்கள்

Pakistan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி மைதானத்தில் முதல் நாளிலேயே இங்கிலாந்து 506 ரன்கள் குவிக்கும் அளவுக்கு சரமாரியாக அடி வாங்கிய அந்த அணி அனைவரது கிண்டல்களுக்கு உள்ளானது. அந்த நிலையில் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடி தோற்றது. இம்முறை சற்று சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தான் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய அந்த அணி 281 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய அப்ரார் அகமது 7 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் ஷாகீல் 63 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 142/2 என்ற நல்ல நிலையில் இருந்தாலும் அவர்கள் அவுட்டானதும் சீட்டுக்கட்டு போல சரிந்து 202 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து ஹரி ப்ரூக் 108 ரன்கள் எடுத்ததையும் தாண்டி 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெளியேறிய பாகிஸ்தான்:
அதிகபட்சமாக மீண்டும் அப்ரார் அகமது 4 விக்கெட்களை எடுத்த நிலையில் 355 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு அசாத் சபிக் 45, முகமத் ரிஸ்வான் 30, ஷாகீல் 94, இமாம்-உல்-ஹக் 60 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர். ஆனாலும் அதை முதல் போட்டியை போலவே அதிரடியாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடாமல் தடவலாக செயல்பட்டதால் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட் எடுத்த நிலையில் 2000க்குப்பின் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 112 புள்ளிகளை 44.44 சதவீதத்துடன் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியது.

இதனால் அடுத்து வரும் போட்டிகளில் வென்றால் தங்களது நாட்டில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் நிலையை இங்கிலாந்து எட்டியுள்ளது. மறுபுறம் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியிலும் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்ற பாகிஸ்தான் இந்த அடுத்தடுத்த தோல்விகளால் தொடர்ச்சியாக 3 அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 1959ஆம் ஆண்டுக்குப்பின் 62 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இப்படி தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

அத்துடன் 56 புள்ளிகளை 42.42 என்ற சதவீதத்தில் மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் வென்றால் கூட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாது என்பதால் இப்போதே பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா (75%), தென்னாப்பிரிக்கா (60%), இலங்கை (53.33%) மற்றும் இந்தியா (52.08%) உள்ளது. முன்னதாக டி20 உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 – 3 (7) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நெதர்லாந்து கொடுத்த அதிர்ஷ்டத்தால் ஃபைனல் வரை முன்னேறிய அந்த அணி 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் பேசினாலும் செயலில் காட்டத் தவறியதால் அதே இங்கிலாந்திடம் மீண்டும் தோற்றது. தற்போது சொந்த மண்ணில் மீண்டும் இந்த டெஸ்ட் தொடரில் தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் தோற்ற அந்த அணி சுழலுக்கு சாதகமான மைதானத்தை கொண்ட 2வது போட்டியிலும் தோற்றது.

இதையும் படிங்க: வீடியோ : இது உங்க ஊர்ல அவுட்டா? சொந்த நாட்டை மண்ணை கவ்வ வைத்த பிரபல பாக் அம்பயர், டிகே முதல் பாபர் அசாம் வரை அதிருப்தி

மொத்தத்தில் சொந்த மண்ணாக இருந்தாலும் வெளிநாட்டு மண்ணாக இருந்தாலும் டி20யாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் பிட்ச் எப்படி அமைந்தாலும் பாகிஸ்தான் தோற்பதில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் நீங்கள் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டீர்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஜோக் என்றும் வழக்கம் போல ரசிகர்கள் விதவிதமாக சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement