அவர கழற்றி விடுங்க – இந்திய பவுலரை கலாய்த்து ரோஹித்தை எச்சரிக்கும் ரசிகர்கள், காரணம் என்ன

IND
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 உலகக் கோப்பை 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் 2007க்குப்பின் எப்படியாவது 2வது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த வாரமே ஆஸ்திரேலியா பயணித்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை இரு தரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா பேட்டிங் துறையில் ஓரளவு வலுவாக இருந்தாலும் பந்து வீச்சு துறையில் பலவீனமாகவே இருக்கிறது.

போதாக்குறைக்கு நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே மிகப் பெரிய பின்னடைவே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருக்கு பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகியோர் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். அதை விட 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக கழற்றி விடப்பட்ட முஹமது ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஹர்ஷல் படேல் கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளிலும் அனைத்து நேரங்களிலும் ரன்களை கொடுக்கும் ரன் மெஷினாக செயல்பட்டு வருவது ஆரம்பம் முதலே ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

- Advertisement -

மோசமான செயல்பாடு:
ஏனெனில் அர்ஷிதீப் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோர் கூட பெரும்பாலான பவுலர்கள் தடுமாறும் டெத் ஓவர்களில் தடுமாறினாலும் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் அசத்தலாக செயல்படும் திறமையை பெற்றுள்ளார்கள். ஆனால் 120 – 130 கி.மீ வேகத்தில் மட்டுமே பந்து வீசக்கூடிய இவர் ஸ்லோ, கட்டர் போன்ற ஒருசில வேரியேஷன்களை மட்டுமே நம்பி மித வேகத்தில் பந்து வீசுவதால் அனைத்து நேரங்களிலும் சரமாரியாக அடி வாங்குகிறார்.

அதிலும் இவர் இல்லாததால் தான் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்தோம் என்று தவறாக நினைத்து விட்டோமே என்று ரசிகர்கள் வருந்தும் அளவுக்கு காயத்திலிருந்து குணமடைந்து சமீபத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் சுமாராக பந்து வீசிய ஹர்சல் படேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்களை கொடுத்த பவுலர், அதிக சிக்சர்களை கொடுத்த பவுலர் ஆகிய 2 மோசமான உலக சாதனைகளை படைத்தார். ஆனாலும் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள அவர் அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதர இந்திய பவுலர்களை காட்டிலும் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 49 ரன்களை 12.25 என்ற மோசமான எக்கனாமியில் வாரி வழங்கினார்.

- Advertisement -

அந்த போட்டியில் கூட அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஆரம்பத்திலேயே துல்லியமாக பந்து வீசி 21/4 என மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியான தொடக்கம் கொடுத்து இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். மேலும் சமீபத்தில் தடுமாறினாலும் அந்த போட்டியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்ட அவர்கள் மொத்தமாக 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஆனால் கொஞ்சமும் முன்னேறாத இவர் அதுவும் 10வது இடத்தில் களமிறங்கிய லோக்கல் பேட்ஸ்மேனுக்கு எதிராக 20வது ஓவரில் 18 ரன்களை வழங்கினார்.

மொத்தத்தில் சாதாரண பயிற்சி போட்டியில் அதுவும் எதிரணியின் தோல்வி உறுதியான நிலையில் 10வது இடத்தில் களமிறங்கிய டெயில் எண்டருக்கு எதிராகக் கூட மோசமாக பந்து வீசும் ஹர்ஷல் படேல் நிச்சயம் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு உதவப் போவதில்லை என்று கூறும் ரசிகர்கள் தயவு செய்து பும்ராவுக்கு பதில் வேறு ஏதேனும் நல்ல பவுலரை அணிக்குள் கொண்டு வந்து இவரை கழற்றி விடுமாறு ரோஹித் சர்மாவுக்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க : நாங்க அடிவாங்க இது இந்தியா இல்ல – டி20 உ.கோ’யில் அசத்துவோம், இந்திய பவுலர்கள் சார்பில் அஷ்வின் உறுதி

மேலும் 2022இல் இதுவரை 21 சர்வதேச போட்டிகளில் 500+ ரன்களை வழங்கியுள்ள இவர் ஒரு போட்டிக்கு சராசரியாக 45 – 50 ரன்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பதால் இவருக்கு பதில் வேறு பவுலரை பயன்படுத்துமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement