IND vs AUS : 2 மோசமான சாதனைகளுடன் சத்தமின்றி வள்ளலாக செயல்படும் இந்திய பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள்

Harshal-2
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 208/6 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 11, விராட் கோலி 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 (25) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அடுத்து வந்த அக்சர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும் 5வது இடத்தில் களமிறங்கி ஆஸ்திரேலியா பவுலர்களை பந்தாடிய ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 236.67 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 71* (30) ரன்களை தெறிக்கவிட்டு சூப்பர் பினிஷிங் கொடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுக்க 209 ரன்களை இலக்காக துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக 22 (13) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டிய ஆஸ்திரேலியா:
இருப்பினும் மற்றொரு இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் இந்திய பவுலர்களை பந்தாடி 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிரடியாக 61 (30) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 35 (24) ரன்களில் நடையை கட்டினார். மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்கிலீஷ் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் விளாசி பினிஷிங் செய்தார். அதனால் 19.2 ஓவரில் 211/6 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

harshal

மறுபுறம் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்ட இந்தியா சொந்த மண்ணில் தலை குனிந்துள்ளது. முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் காயத்தால் விலகியதால் தோல்வி கிடைத்ததாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த ஹர்ஷல் படேல் அதிலிருந்து குணமடைந்து இந்த போட்டியில் பந்து வீசியதால் இந்தியா வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு மாதம் கழித்து பந்து வீசிய அவர் ஆரம்பம் முதலே ரன்களை வாரி வழங்கி மொத்தமாக 4 ஓவரில் 12.25 என்ற மோசமான எக்கனாமியில் 49 ரன்களை வழங்கி அரை சதத்தை 1 ரன்னில் தவறவிட்டார்.

- Advertisement -

சத்தமின்றி வள்ளல்:
குறிப்பாக கடைசி 3 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 40 ரன்கள் தேவைப்பட்ட போது 18வது ஓவரை வீசிய அவர் கொஞ்சம் கூட பொறுப்பை காட்டாமல் 22 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார். இதற்காக காயத்தில்லிந்து திரும்பி வந்தவர் இப்படி சுமாராக பந்து வீசுவது இயல்பு தானே என்று அனைவரும் நினைப்பார்கள்.

- Advertisement -

ஆனால் உண்மை என்னவெனில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை வழங்கிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை காயத்திற்கு முன்பாகவே படைத்த அவர் அதை இப்போதும் தொடர்கிறார். அந்தப் பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் : 28* (2022)
2. யுஸ்வென்ற சஹால் : 22 (2017)
3. ஆவேஷ் கான்/ சஹால் : 21 (2022/2018)

அது போக நேற்றைய போட்டியில் 49 ரன்களை வாரி வழங்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் : 5*, 2022
2. ஆவேஷ் கான் : 4, 2022
3. புவனேஸ்வர் குமார் : 4, 2022

- Advertisement -

இப்படி இந்த வருடம் பெரும்பாலும் இந்திய மண்ணில் விளையாடி சத்தமின்றி ரன் மெஷினாக வள்ளல் பரம்பரையாக செயல்படும் இவரை போய் ஆஸ்திரேலியாவில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமே என்று ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிங்க : 200க்கு மேல இலக்கு இருந்தும் நாங்க ஜெயிக்க இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – ஆரோன் பின்ச் பேசிய என்ன?

இதனால் டி20 உலகக்கோப்பை அணியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லும் இந்திய அணியில் தேவையா என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement