ஏமாற்றப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கி சாயம் பூசிய பிசிசிஐ – கலாய்க்கும் ரசிகர்கள், முழுவிவரம்

Sanju-Samson-2
- Advertisement -

வரும் அக்டோபரில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட அறிமுகமான 2018 முதல் 58 என்ற அதிகப்படியான போட்டிகளில் வாய்ப்பு பெற்று தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதைவிட காலம் காலமாக வாய்ப்புக்காக ஏங்கி வரும் சஞ்சு சாம்சனுக்கு ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் கொடுக்காமல் மீண்டும் தேர்வுக்குழு கழற்றிவிட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

அதில் மேலும் ஒரு கொடுமை என்னவெனில் உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் அவர் சேர்க்கப்படாதது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் தன்னுடைய 2வது போட்டியை 2019இல் விளையாடினார் என்பதே மிகப்பெரிய வேதனையாகும்.

- Advertisement -

அதன் பின் 1 வருடத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என தேவைப்படும் போது மட்டும் தேர்வு செய்த தேர்வுக்குழு பெரும்பாலும் குப்பையை போல் தூக்கி எறிந்தது. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஜாம்பவான் ஷான் வார்னேவுக்குப் பின் அந்த அணியை பைனலுக்கு அழைத்துச் சென்று அசத்தலாக செயல்பட்டார்.

ஏமாற்றப்படும் சாம்சன்:
ஆனாலும் அதன் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மீண்டும் புறக்கணித்ததால் கொந்தளித்த ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாத தேர்வுக்குழு அடுத்ததாக நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் தேர்வு செய்தது. அதில் 2வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரை சதமடித்து 77 ரன்கள் குவித்த அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அதன் பின் நடந்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விடப்பட்ட அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டும் உலகக் கோப்பை அணியில் கழற்றி விடப்பட்டது ரசிகர்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் விரைவில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனை பிசிசிஐ கேப்டனாக அறிவித்துள்ளது.

சப்பை கட்டு:
முன்னதாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் செப்டம்பர் 1, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் செப்டம்பர் 15இல் துவங்கி தற்போது நடைபெற்று வரும் 3வது போட்டியும் ட்ராவை நோக்கி நடைபெற்று வருகிறது. அதன் பின் வரும் செப்டம்பர் 22, 25, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தலைநகரமான சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்காக இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவரது தலைமையில் ருதுராஜ் கைக்வாட், உம்ரான் மாலிக், பிரிதிவி ஷா போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டி20 உலக கோப்பையில் இடம் பிடித்திருக்க வேண்டிய சஞ்சு சாம்சன் இந்த அணியில் இடம் பிடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் சோகமடைகின்றனர். அத்துடன் வருடக்கணக்கில் சஞ்சு சாம்சனுக்கு இழைத்து வரும் அநீதிக்கு இந்த அறிவிப்பின் வாயிலாக பிசிசிஐ சப்பை கட்டு போட்டுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க: 2007 மாதிரி மீண்டும் மேஜிக் நடந்து 2022 டி20 உ.கோ இந்தியா வெல்லும் – இந்திய வீரர் நம்பிக்கை

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக களமிறங்கும் இந்தியா ஏ அணி இதோ:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), பிரிதிவி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கைக்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், கேஎஸ் பரத் (கீப்பர்), குல்தீப் யாதவ், சபாஸ் அஹமத், ராகுல் சஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷார்துல் தாகூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் பாவா

Advertisement