IND vs ENG : மாதத்துக்கு 2 கேப்டன்களா – பிசிசிஐயை இந்திய ரசிகர்களே கலாய்க்கும் பரிதாப நிலைமை, காரணம் இதோ

Indian Team
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பர்மிங்காமில் நடந்த கடைசி போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 378 ரன்கள் இலக்கை அசால்டாக துரத்திய இங்கிலாந்து சரித்திர வெற்றியை பெற்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அசத்திய இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

இதை தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதியன்று துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கனுக்கு பின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் ஜேசன் ராய், மொயின் அலி போன்ற அதிரடியான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து இத்தொடரிலும் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைக்க தயாராகியுள்ளது. ஆனால் இம்முறை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்ற தரமான வீரர்களை கொண்ட இந்தியா அந்த சவாலை சமாளித்து டெஸ்ட் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பழி தீர்க்க போராட உள்ளது.

- Advertisement -

வெ.இ தொடர்:
ஜூலை 10-ஆம் தேதியுடன் முடியும் இந்த டி20 தொடருக்குப் பின் ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சந்திக்கிறது. இந்த சுற்றுப்பயணத்துக்கு பின் அப்படியே வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள அந்த தொடரின் கேப்டனாக கதை முடிந்தது என்று நினைக்கப்பட்ட ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் 37 வயதை கடந்துள்ள அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில் சமீப காலங்களில் டி20 அணியிலிருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற வீரர்கள் இருப்பதால் 2023 உலகக் கோப்பையில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

2022இல் 8 கேப்டன்கள்:
இருப்பினும் அவரது அனுபவத்தை மதித்து இதுபோன்ற 2-வது தர தொடர்களில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதைவிட இதன் வாயிலாக 2022 கேலண்டர் வருடத்தில் இந்தியாவை வழிநடத்தும் 8-வது கேப்டன் என்ற பெயரை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

1. ஆம் 2022 புத்தாண்டு துவங்கியபோது தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் அப்போதைய கேப்டன் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

2. அதன்பின் 3-வது போட்டியில் கேப்டனாக திரும்பிய விராட் கோலி முதலும் கடைசியுமாக இந்தியாவை வழிநடத்தி பதவியை ராஜினாமா செய்தார்.

3. அதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இந்தியாவை வழி நடத்தினார்.

- Advertisement -

4. பின்னர் நடந்த ஐபிஎல் 2022 தொடருக்குப்பின் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

5. அதன்பின் அயர்லாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

6. பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கு ஜஸ்பிரித் பும்ரா 6-வது கேப்டனாக செயல்பட்ட நிலையில் அதே சமயத்தில் 2 கவுண்டி அணிகளுக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் இந்தியாவை 7-வது கேப்டனாக வழி நடத்தினார். தற்போது ஷிகர் தவான் 8-வது கேப்டனாக இந்தியாவை வழி நடத்த போகிறார்.

கலாய்க்கும் ரசிகர்கள்:
இதை பார்த்த இந்திய ரசிகர்களை தற்போது சமூக வலைதளங்களில் பிசிசிஐயை சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் இதுவரை 6 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் 7 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர். இதைப் பார்க்கும்போது மாதத்திற்கு ஒரு கேப்டன் என்பதையும் தாண்டி இனிமேல் மாதத்துக்கு 2 கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்த போகிறார்கள் என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்திய வீரரான அவர் எங்க டீம்ல விளையாட வேண்டிய வீரர் – பென் ஸ்டோக்ஸ் புகழாரம்

மேலும் இப்படி வெவ்வேறு கேப்டன்களை வைத்து விளையாடினால் எப்படி ஒருவர் தலைமையில் அனைவரும் செட்டாகி இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நியாயமான கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புகின்றனர். போற போக்கை பார்த்தால் இந்த வருடம் முடிவதற்குள் விளையாடும் 11 வீரர்களும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு உலகசாதனை படைத்தாலும் ஆச்சரியமில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement