SL vs BAN : வாயிலும் களத்திலும் மெகா சண்டை, வம்பிழுத்து அடிவாங்கிய வங்கதேசத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தங்களது முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அதன் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற வாழ்வா – சாவா நிலைமையில் இவ்விரு அணிகளும் மோதின. ஆனால் அதற்கு முன்பாகவே களத்திற்கு வெளியே இவ்விரு அணிகளும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டது.

ஏனெனில் இப்போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் “முஸ்தபிசுர் ரஹ்மான் நல்ல பவுலர். அதேபோல் சாஹிப் அல் ஹசன் உலகத்தரம் வாய்ந்த பவுலர். ஆனால் அவர்களைத் தவிர வங்கதேசத்தில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இல்லை” என்று இலங்கையின் கேப்டன் தசுன் சனாகா ஸ்லெட்ஜிங்கை துவக்கினார். அதற்கு வங்கதேச அணியின் இயக்குனர் கலீல் மஹ்மூத் “அவர் எங்களது அணியில் 2 பவுலர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறினார். ஆனால் இலங்கையில் ஒரு தரமான பவுலர்கள் கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்களது அணியிலாவது சாகிப் மற்றும் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். ஆனால் அவர்களது அணியில் அதுகூட இல்லை” என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய வங்கதேசம்:
இப்படி ஆரம்பத்திலேயே பற்றிய நெருப்பில் “இது களத்தில் செயல்பட்டு சாதித்து காட்ட வேண்டிய நேரம்” என்று இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே எண்ணையை கொஞ்சம் ஊற்றினார். அதனால் ஆரம்பத்திலேயே அனல் பற்றிய இப்போட்டி நேற்றிரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாயில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு தொடக்க வீரர் ஹசன் 5, முஸ்தபிசுர் ரஹீம் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அந்த நிலைமையில் மற்றொரு தொடக்க வீரர் ஹசன் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (26) ரன்களும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 24 (22) ரன்களிலும் அவுட்டானார்கள். அதனால் 10.3 ஓவரில் 87/4 என திணறிய வங்கதேசம் 150 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட நிலையில் மிடில் ஆர்டரில் அபிஃப் ஹொசைன் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (22) ரன்களும் மகமதுல்லா 27 (22) ரன்களும் எடுத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய மொஷாதிக் ஹொசைன் 4 பவுண்டரிகளுடன் 24* (9) ரன்களையும் தஸ்கின் அஹமத் 11* (6) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

போராடிய இலங்கை:
அதனால் 20 ஓவர்களில் வங்கதேசம் 183/7 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் கருணரத்னே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அப்போது பேட்டிங்கில் எழுச்சி கண்ட வங்கதேசத்திடம் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 105 ரன்களுக்கு சுருண்ட இலங்கை தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 184 ரன்களை துரத்திய அந்த அணிக்கு தொடக்க வீரர் நிசாங்கா 20 (19) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அசலங்கா 1, குணதிலகா 11, ராஜபக்சா 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

ஆனால் மறுபுறம் அதிர்ஷ்த்துடன் நான்கைந்து முறை அவுட் ஆவதிலிருந்து தப்பிய மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 60 (37) ரன்களை விளாசி 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஹசரங்கா 2 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் பொறுப்பாக விளையாடிய கேப்டன் தசுன் சனாகா அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (33) ரன்கள் குவித்து வெற்றியை நெருங்கியபோது ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரை வீசிய ஹுசைன் நோ-பால் உட்பட 18 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் கருணரத்னே 16 (10) ரன்களில் ரன் அவுட்டானாலும் கடைசி ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட இலங்கைக்கு 2 பவுண்டரிகளை பறக்கவிட்ட அவிஷ்கா பெர்னான்டோ 10* (3) ரன்களை விளாசி 19.2 ஓவரில் 184/8 ரன்களை எடுக்க வைத்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்தில் சொதப்பினாலும் கடைசியில் அசத்திய வங்கதேசம் பந்துவீச்சில் ஆரம்பத்தில் அசத்தலாக செயல்பட்டாலும் கடைசியில் சொதப்பி வழக்கம் போல தோல்வியடைந்தது. 2 பவுலர்களை தவிர வேறு தரமான பவுலர்கள் இல்லை என்று உண்மையை சொன்ன இலங்கையை மொத்தமாக மோசமான அணி என்ற வாய்பேசிய வங்கதேசம் களத்தில் அதற்கேற்றாற்போல் செயல்படாமல் தோல்வியை சந்தித்து இந்த ஆசிய கோப்பையிலிருந்து முதல் அணியாக வெளியேறியதால் நிறைய ரசிகர்கள் அந்த அணியை சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

மறுபுறம் வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி களத்திலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வாழ்வா சாவா போட்டியில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement