தப்பு கணக்கு போட்டு அடிவாங்கிய வங்கதேசம், சாகிப் அல் ஹசனை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – நடந்தது இதோ

Afg vs Ban Najibullah Zadran 2
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குரூப் பி பிரிவின் ஒரு அங்கமாக சார்ஜாவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் வெறும் 127/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. நைம் 6, ஹைக் 5, கேப்டன் சாகிப் அல் ஹசன் 11, முஸ்தபிசுர் ரஹீம் 1, அகில் ஹொசைன் 12 என முக்கியமாக பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 53/5 என திணறிய அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

அப்போது நிதானத்தை காட்டிய முகமதுல்லா 25 (27) ரன்களும் அதிரடியை காட்டிய ஹொசைன் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 48* (31) ரன்களும் எடுத்து ஓரளவு மானத்தைக் காப்பாற்றினர். அந்தளவுக்கு அற்புதமாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் சார்பில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்கள் ரஷீத் கான் மற்றும் முஜிப் உர் ரகுமான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே துல்லியமாக பந்து வீசிய வங்கதேசம் அழுத்தத்தை கொடுத்தது.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:
அதில் தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 11 (18) ரன்களில் தடுமாறி ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் ஹஸரத்துல்லா 23 (26) ரன்களில் நடையை கட்டினார். அந்த சமயத்தில் கேப்டன் முகமது நபியும் 8 (9) ரன்களில் அவுட்டானதால் 13 ஓவரில் 62/3 என தடுமாறிய ஆப்கானிஸ்தானின் வெற்றி கேள்விக்குறியான போது களமிறங்கிய நஜிபுல்லா ஜாட்ரான் அதிரடியான சிக்சர்களை பறக்கவிட்டார். அவருடன் பேட்டிங் செய்த மற்றொரு இளம் வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் 4 பவுண்டரியுடன் 42* (41) ரன்கள் எடுக்க மறுபுறம் 1 பவுண்டரி 6 சிக்சர்களை தெறிக்கவிட்ட நஜிபுல்லா ஜாட்ரான் 43* (17) ரன்களை 252.94 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

அதனால் 18.3 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்து அதிரடி வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் தங்களது முதல் லீக் போட்டியில் ஏற்கனவே இலங்கை தோற்கடித்திருந்ததால் குரூப் பி பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் வெற்றியை பெற்று 4 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற அசத்தியது. இந்த வெற்றிக்கு 43* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய நஜிபுல்லா ஜாட்ரான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:
மறுபுறம் இப்போட்டியில் ஆரம்பம் முதலே குளறுபடியான முடிவுகளை எடுத்து படுதோல்வியைச் சந்தித்த வங்கதேசத்தை ரசிகர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். ஏனெனில் அரபு நாடுகளில் குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் டி20 போட்டிகளில் டாஸ் வென்றால் யோசிக்காமல் உடனடியாக பந்து வீச தீர்மானித்து சேசிங் செய்தாலே 90% வெற்றி கிடைத்துவிடும் என்பது உலகிற்கே தெரிந்த கதையாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தங்களது முதல் லீக் போட்டியில் அதிர்ஷ்டம் கிடைத்தும் கோட்டை விட்டது போல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இத்தனைக்கும் சமீபத்தில் ஜிம்பாப்வேவிடம் அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் தோல்வியை சந்தித்த அந்த அணி கடைசி நேரத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சாகிப் அல் ஹசன் தலைமையில் இந்த ஆசிய கோப்பைக்கு வந்துள்ளது. அப்படி செட்டாகாமல் வந்துள்ள அந்த அணி ஆப்கானிஸ்தான் அதனுடைய முதல் போட்டியில் இலங்கையை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டி அதை வெறும் 10 ஓவர்களில் சேசிங் செய்ததை தெரிந்தும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த முடிவை தான் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

குறிப்பாக நேற்று தனது 100வது போட்டியில் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக மிகப்பெரிய தவறு செய்து தைரியமாக முதலில் பேட் செய்வதாக அறிவித்தாலும் அதற்கேற்றார் போல் ரன்களை எடுக்காமல் ஆப்கானிஸ்தானிடம் பல்ப் வாங்கினார். அதேபோல் பவுலர்களை பயன்படுத்திய விதமும் தவறாக இருந்தது.

இதையும் படிங்க : சிக்சர்களை பறக்கவிட்டு வங்கதேசத்தை நொறுக்கிய ஆப்கன் இளம் வீரர் – 2 வரலாற்று சாதனைகளுடன் மாஸ் வெற்றி

மேலும் இதிலிருந்து ஆப்கானிஸ்தானை குறைத்து எடை போட்டது தெளிவாகத் தெரிவதாக கூறும் ரசிகர்கள் அதற்கு பயனாக இந்த சரமாரியான அடியும் படு தோல்வியையும் சந்திப்பதற்கு வங்கதேசம் தகுதியான அணி என்றும் கூறுகிறார்கள். இதை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தனது 2வது போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Advertisement