278 ஸ்ட்ரைக் ரேட், 4 விக்கெட் – ரஞ்சி கோப்பையில் தெறிக்க விட்ட ரியான் பராக், கலாய்த்த ரசிகர்கள் பாராட்டு

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இருக்கும் புகழ்பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 56வது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள அசாம் – ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக 8வது இடத்தில் களமிறங்கிய புர்காயஸ்தா 11 பௌண்டரி 3 சிக்ஸருடன் 83 (88) ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக ரவி தேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பந்து வீச்சில் அசத்திய அசாம் வெறும் 207 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ரோகித் ராயுடு 59 ரன்களும் பகத் வர்மா 46 ரன்களும் எடுத்த நிலையில் அசாம் சார்பில் நம்பிக்கை நட்சத்திர இளம் ஸ்பின்னர் ரியான் பராக் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட பராக்:
அதை தொடர்ந்து 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அசாம் அணிக்கு மீண்டும் கேப்டன் சைக்கியா 8, ஹசாரிக்கா 5 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 29/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷவ் தாஸ் – ரியன் பராக் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். அதில் ஒருபுறம் தாஸ் நிதானத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் திடீரென்று சூப்பர் ஸ்டாரை போல மிரட்டலாக செயல்பட்ட ரியான் பராக் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த பவுண்டரிகளை சிக்ஸர்களையும் விளாசினார்.

முதல் இன்னிங்ஸில் சாதுவாக விளையாடிய அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை 2வது இன்னிங்ஸில் வெறித்தனமாக பேட்டிங் செய்து வெறும் 19 பந்துகளில் அரை சதம் கடந்து வேகமாக ரன்களை குவித்தார். தொடர்ந்து பட்டையை கிளப்பிய அவர் 3வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 (28) ரன்களை 278.58 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 2வது நாள் முடிவில் அசாம் 182/6 ரன்களுடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

இப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் என்பதையும் மறந்து தரமான ஹைதராபாத்துக்கு எதிராக சரவெடியாக பேட்டிங் செய்து டி20 இன்னிங்ஸ் விளையாடிய ரியான் பராக் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக 2வது நாளில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அவர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்ட அவர் அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயதிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையுடன் ஒரு போட்டியில் வெற்றி பெற வைத்த அவர் வித்தியாசமாக நடனமாடி முதல் முறையாக அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அந்த வெற்றியால் மிகவும் கவரப்பட்ட ராஜஸ்தான் நிர்வாகம் அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக எண்ணி கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து பெரிய தொகைக்கு தக்க வைத்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனால் இந்திய வெள்ளைப்பந்து அணியில் ரிஷப் பண்ட் போல அந்த வாய்ப்புகளை வீணடித்து வரும் அவர் 4 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதுடன் ட்விட்டரில் என்னமோ விராட் கோலி போல் பெரிய சாதனைகளை படைத்தது போல் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 இதையும் படிங்கIND vs BAN : ரிஷப் பண்ட் சோம்பேறித்தனமே விராட் கோலிக்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்க காரணம் – பின்னணியை பகிர்ந்த அஷ்வின்

அத்துடன் 2022 ஐபிஎல் தொடரில் மேத்யூ ஹெய்டன் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்களை மறைமுகமாக கலாய்த்த அவர் மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியடைந்து பார்க்கும்போதெல்லாம் வாயில் பேசாமல் செயலில் காட்டுங்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள். இருப்பினும் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் நல்ல செயல்பாடுகள் வெளிப்படுத்திய அவர் இப்போட்டியில் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு செயலில் பேசியதை பார்க்கும் ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement