- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : இப்படி ஒரு பழக்கமா – ரிசப் பண்ட்டை பார்த்து வியக்கும் ரசிகர்கள், எதற்குனு பாருங்க

பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 412 ரன்கள் குவித்தது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த முக்கிய போட்டியில் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 98/5 என்ற நிலையுடன் ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார்கள்.

அதில் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை குவித்து டி20 இன்னிங்ஸ் விளையாட ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க அவருடன் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் குவித்தார். இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-ஆவது ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட பும்ரா ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 84/5 என்ற நிலைமையில் விளையாடி வருகிறது.

- Advertisement -

மிரட்டல் பண்ட்:
முன்னதாக இப்போட்டியில் இந்தியா 98/5 என சரிந்த போது கொஞ்சம் கூட பயப்படாமல் மிரட்டலாக பந்துவீசிய இங்கிலாந்துக்கு மிரட்டல் அளிக்கும் வகையில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் பல சாதனைகளைப் படைத்து ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அதிலும் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான அழுத்தம் நிறைந்த இப்போட்டியில் அவர் சதமடித்தது உண்மையாகவே அவரின் திறமையை காட்டுகிறது.

ரசிகர்கள் வியப்பு:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5-வது சதத்தை அடித்துள்ள ரிஷப் பண்ட் அந்த 5 சதங்களையும் வெவ்வேறு நாடுகளில் அடித்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு மண்ணில் 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதில் 2 சவாலான இங்கிலாந்து மண்ணிலும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க மண்ணில் தலா 1 சதங்களும் அடித்து வெளிநாட்டு மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

1. அதைவிட இதுவரை அவர் அடித்துள்ள 5 சதங்களுமே ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அடிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆம் கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கோட்டை விட்டது.

ஆனாலும் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் சதமடித்து 114 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக தோனியால் படைக்க முடியாத சாதனையை படைத்தார். இருப்பினும் அப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்து 3 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

- Advertisement -

2. அதன்பின் கடந்த 2019இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (4) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 159* ரன்கள் அடித்து சதம் விளாசினார்.

அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த நிலையில் மழையால் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் 2 – 1 என்ற கணக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து இந்தியா தொடரை வென்றது.

- Advertisement -

3. கடந்த 2021 பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது அகமதாபாத் நகரில் நடந்த கடைசி போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்சில் சதமடித்த பண்ட் 101 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றதால் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

4. அதன்பின் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமநிலைப் பெற்றபோது நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் சதமடித்த பண்ட் 100* ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார். ஆனால் இதர பேட்ஸ்மேன்கள் கோட்டை விட்டதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்து நம்பர் ஒன் அந்தஸ்தையும் இழந்தது.

இதையும் படிங்க : IND vs ENG : அதனால் தான் அப்போவும் இப்போவும் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைக்கல – காரணத்தை சொன்ன முன்னாள் கோச்

தற்போதும் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்துள்ளது அழுத்தம் நிறைந்த போட்டிகளில் கொஞ்சமும் பயப்படாமல் தில்லாக பேட்டிங் செய்யும் அவரின் அற்புதமான திறமையை காட்டுகிறது. இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு பழக்கம் வேற இருக்கா என்று சமூக வலைதளங்களில் கலக்கிறார்கள்.

- Advertisement -
Published by