ஐபிஎல் 2022 தொடரில் மே 24-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் சந்தித்தன. புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 3 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் 47 (26) ரன்களையும் தேவ்தூத் படிக்கல் 28 (20) ரன்களையும் அதிரடியாக விளாசி ஆட்டமிழந்தனர்.
கடைசியில் சிம்ரோன் ஹெட்மையர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனாலும் ஆரம்பம் முதல் நங்கூரமாக நின்று பொறுமையான பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் கடைசி நேரத்தில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 2 சிக்சருடன் 89 (56) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.
ராஜஸ்தான் தோல்வி:
அதை தொடர்ந்து 189 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரிதிமான் சஹா டக் அவுட்டானாலும் அடுத்து ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் மேத்தியூ வேட் ஆகியோர் தலா 35 ரன்களை அதிரடியாக அடித்து 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் 85/3 என்ற நிலைமையில் தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கி நங்கூரமாக நின்று தூக்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி உட்பட 40* (27) ரன்கள் எடுக்க அவருக்கு உறுதுணையாக அவரை விட அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்கள் குவித்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.
குறிப்பாக பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த 3 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 19.3 ஓவரில் குஜராத்தை 191/3 ரன்களை எட்ட வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசிக்க வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். இந்த வெற்றியால் தனது முதல் வருடத்திலேயே குஜராத் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நேரடியாக தகுதி பெற்று சாதித்துள்ளது.
மற்றுமொரு வாய்ப்பு:
மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்த ராஜஸ்தான் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட தவறியதால் நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த அணியின் டிரென்ட் போல்ட், பிரஸித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் ஆகிய 3 முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் 9.50க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதைவிட அந்த அணியின் இரட்டை குழல் துப்பாக்கி சுழல் பந்துவீச்சு ஜோடியான அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் 1 விக்கெட் கூட எடுக்காததும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் வரும் மே 27இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட ராஜஸ்தானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புள்ளது. அதில் எப்படியாவது வென்று மீண்டும் பைனலுக்குள் நுழைய அந்த அணி கடுமையாக போராடும் உள்ளது.
அக்தருக்கு போட்டி:
முன்னதாக இப்போட்டியில் 189 ரன்களை குஜராத் துரத்திய போது 7-வது ஓவரை வீசிய தமிழக வீரர் அஸ்வின் சுப்மன் கில் வீசிய 3-வது பந்து 131.6 கிலோ மீட்டர் வேகம் என்று ஸ்பீடோமீட்டர் கருவி பதிவு செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகின்றன. பொதுவாக சுழல் பந்துவீச்சாளர்கள் 80 – 90 கி. மீ வேகத்தில் மட்டுமே வீசுவார்கள். எப்போதாவது பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதற்காக சற்று வேகத்துடன் வீசுவார்கள். அந்த வகையில் அனில் கும்ப்ளே, சாகித் அப்ரிடி போன்ற ஒரு சிலர் மட்டுமே 90 – 110 வேகத்தில் வீசியதை இதற்குமுன் பார்த்துள்ளோம்.
In last night Ashwin bowling speed 131.6 km/h #RRvsGT #IPL2022 @mufaddal_vohra pic.twitter.com/qghbnrAKQs
— Indrjit Pulle Reddy (@ReddyIndrjit) May 25, 2022
OMG fastest delivery by an off spinner. Ash Anna clocked 131.6 km/h last night.
JD should learn something from Scientist Ashwin 🥲
😱😱😱😱#Ashwin pic.twitter.com/dVhM31TSsQ— 𝓡𝓸𝓬𝓴𝓼𝓽𝓪𝓻 𝓜𝓚 (@RockstarMK11) May 25, 2022
131.6 kph by Ashwin. Umm…what?? Itna to unke fast Bowlers bhi nai mrte pace 😂🙊 pic.twitter.com/H4mIKzxly3
— Ixhan Mirza 🖤 (@green_shirts33) May 24, 2022
Kahi Shoaib Akhtar ka record aswin hi na tod de 😂
— CHATRA RAM PARMAR (@chatra_parmar) May 24, 2022
ஆனால் 131.6 என்பது ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் வீசக் கூடிய பந்து என்ற நிலையில் அதை அஸ்வின் வீசியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஸ்பின்னரால் வீசப்பட்ட அதிவேகமான சுழல் பந்தாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் பேசுகின்றனர். ஏற்கனவே பந்துவீச்சில் பல மாயா ஜாலங்களையும் சாதனைகளையும் படைத்து வரும் அஷ்வின் சமீப காலங்களில் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். தற்போது பந்துவீச்சில் வேகத்தைக் கொண்டு வந்துள்ள அவர் இப்படியே விட்டால் சோயப் அக்தரின் 161.3 கி.மீ உலக சாதனையையும் உடைத்து விடுவார் போல என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலகலப்பாக பேசுகின்றனர்.