நம்ம புஜாராவா இது, நாலாபுறமும் சுழன்றடித்து மிரட்டலான சதம் – கவுண்டி சம்பவதால் ரசிகர்கள் வியப்பு

Cheteswar Pujara County
- Advertisement -

இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் இந்த வருடத்துக்கான சீஸனின் முதல்கட்ட லீக் போட்டிகள் முடிவுற்றது. அதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் செடேஸ்வர் புஜாரா சதங்களையும் இரட்டை சதங்களை விளாசி ரன் மழை பொழிந்து இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்கும் அளவுக்கு தாம் விளையாடிய சசக்ஸ் அணிக்காக அபாரமாக செயல்பட்டார். அத்துடன் கடைசி நேரத்தில் அந்த அணியின் கேப்டன் காயத்தால் விலகியதால் புஜாரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த நிலைமையில் இந்த கவுண்டி கிரிக்கெட்டின் ஒருநாள் தொடராக ராயல் லண்டன் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 2 முதல் நடைபெற்று வருகிறது.

அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள வார்விக்ஷைர் மற்றும் சசக்ஸ் ஆகிய அணிகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதியான நேற்று நடந்த லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வார்விக்ஷைர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 310/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ராப் எட்ஸ் 14 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 114 (111) ரன்களும் கேப்டன் வில் ரோட்ஸ் 76 (70) ரன்களும் மைக்கல் பர்கஸ் 58 (51) ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

தெறிக்கவிட்ட புஜாரா:
அதை தொடர்ந்து 311 என்ற கடினமான இலக்கை துரத்திய சசக்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஹரிசன் வார்ட் 22 (25) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய டாம் கிளாக் 30 (43) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அலி ஓர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 81 (102) ரன்கள் குவித்து அவுட்டானதால் 33.1 ஓவரில் 172/3 என்ற நிலைமையில் அந்த அணி மிடில் ஓவர்களில் தடுமாறியது. அப்போது களமிறங்கிய கேப்டன் புஜாரா வழக்கம்போல நங்கூரமாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டன் என்ற பொறுப்பில் பொங்கி எழுந்த புஜாரா தனக்கே உரித்தான மெதுவான பேட்டிங்கை தூக்கி எறிந்துவிட்டு எதிரணி பவுலர்களை தெறிக்க விடும் வகையில் பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவர் மட்டும் ஒருபுறம் அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் டாம் அஸ்லோப் 7 (14) ராவின்ஸ் 11 (13) டேனியல் இப்ராஹிம் 5 (6) என முக்கிய பேட்ஸ்மென்கள் கைகொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

வீணான போராட்டம்:
இருப்பினும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த புஜாரா அதிரடியான அரைசதம் கடந்து 311 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக நோர்வால் வீசிய 47வது ஓவரில் ரிஷப் பண்ட் போல மாறிய அவர் 4, 2, 4, 2, 6, 4 என மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடித்து ஒரே ஓவரில் 22 ரன்களை தெறிக்க விட்டு அனைவரையும் மேலும் ஆச்சரியப்படுத்தினார். அப்படி அதிரடியாக விளையாடிய புஜாரா சதத்தையும் விளாசி தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தபோது துரதிஷ்டவசமாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 107 (79) ரன்கள் எடுத்திருந்த போது 49வது ஓவரில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார்.

அதனால் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால் 50 ஓவர்களில் 306/7 ரன்கள் மட்டுமே சசக்ஸ் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. அதனால் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாக பொறுப்புடனும் அதிரடியாக விளையாடிய புஜாராவின் போராட்டமும் வீணானது. இருப்பினும் இந்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்த்து இந்திய ரசிகர்கள் வாய் மீது கை வைக்குமளவுக்கு சமூக வலைதளங்களில் தங்களது வியப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:
ஏனெனில் பொதுவாகவே பொறுமையின் சிகரமாக அதிக பந்துகளை எதிர்கொண்டு 50க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை எடுக்கும் பேட்ஸ்மேனாக போற்றப்படும் புஜாரா நிறைய போட்டிகளில் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்யக்கூடியவர். அதனாலேயே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறாத அவரை ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் வாங்கவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 312 ரன்களை துரத்தும் போது தனி ஒருவனாக 107 (79) ரன்களை 135.44 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்தார் என்பது பல ரசிகர்களால் நம்ப முடியாததாக இருக்கிறது.

இதையும் படிங்க : பாரத பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள். தல தோனி செய்துள்ள மாற்றம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இருப்பினும் அதுதான் உலகத்தரம் வாய்ந்த வீரருக்கு அடையாளம் என்பது போல் தம்மாலும் அதிரடியாக விளையாட முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ள புஜாராவை சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

Advertisement