ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஜூன் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பந்து வீச்சில் 151/5 என தடுமாறி வருகிறது.
குறிப்பாக ரோகித் சர்மா 15, கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 71/4 என திணறிய இந்தியாவை சற்று அதிரடியாக விளையாடி காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 (51) ரன்களில் அவுட்டானார். அதனால் இப்போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கே இன்னும் 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பரிதாப நிலமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவிற்கு களத்தில் ரகானே 29*, பரத் 5* ரன்களுடன் உள்ளனர்.
ரசிகர்கள் சாடல்:
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற கேப்டன் ரோகித் சர்மா மேகமூட்டத்துடன் கூடிய வானிலை இருப்பதால் முதலில் பந்து வீச தீர்மானித்ததை கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதை விட இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் மட்டும் நூற்றாண்டுக்கும் மேலாக சுழலுக்கு சாதகமாக இருந்து வருவதால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் விளையாட வேண்டுமென சச்சின், பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் கடந்த ஃபைனலில் அந்த இருவரையும் தேர்வு செய்தது தோல்வியை கொடுத்ததால் இம்முறை ரோகித் – ட்ராவிட் ஆகியோர் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டு புதிய முடிவை எடுத்தனர். அந்த நிலையில் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற உமேஷ் யாதவ் விக்கெட் எடுக்காமல் 77 ரன்களை கொடுத்தது வேறு கதை. ஆனால் இப்போட்டியில் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை நல்ல ஃபார்மில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக விளையாடி மீட்டெடுக்க போராடினார்.
குறிப்பாக ரகானேவுடன் இணைந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றி அரை சதத்தை அவர் நெருங்கிய போது ஆஸ்திரேலியா தங்களுடைய ஒரே ஸ்பின்னரான நேத்தன் லயனை கொண்டு வந்தது. அதில் முதல் ஓவரிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பந்து வீசிய நேதன் லயனின் 2வது ஓவரின் 3வது பந்தில் ஜடேஜாவை ஸ்லீப் பகுதியில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்கினார். மறுபுறம் அதுவரை சிறப்பாக விளையாடிய ஜடேஜா எப்படி அந்த பந்தை சரியாக கணிக்க தவறினோம் என்ற ஆச்சரியத்தில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார்.
மொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜாவை போட்டியின் 8வது பந்திலேயே ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னராக நேதன் லயன் அதுவும் பேட்டிங்க்கு சாதகமான 2வது நாள் பிட்ச்சிலேயே அவுட்டாக்கினார். அந்த சூழ்நிலையில் 474 ரன்களை விக்கெட்டுகளை எடுத்து ஏகப்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட் செய்த பவுலராக உலக சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம்.
அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயமாக டிராவிஸ் ஹெட்டை அதிரடியாக விளையாடி இவ்வளவு பெரிய ரன்களை எடுக்க விட்டுருக்க மாட்டார் என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் கவாஜா, வார்னர், ஹெட், அலெக்ஸ் கேரி ஆகிய ஆஸ்திரேலியாவின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் உள்ள 4 இடது கை பேட்ஸ்மேன்களை 2 இன்னிங்சிலும் அஸ்வின் அச்சுறுத்தி குறைந்த ரன்களுக்கு அவுட்டாக்கியிருப்பார் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க:WTC Final : இந்தியா ஜெயிக்க வாய்ப்பில்ல ராஜா, முதல் நாளிலேயே லென்த்துல தப்பு பண்ணிட்டீங்க – அடித்துக்கூறும் பாண்டிங்
குறிப்பாக 4, 5 ஆகிய நாட்களில் பிட்ச் இன்னும் சுழலுக்கு சாதகமாக மாறும் போது அஷ்வினை தொடுவதற்கே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் யோசிப்பார்கள் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் எங்களுக்கு தெரிந்த இந்த அடிப்படை யுக்தி உங்களுக்கு தெரியாதா? என்று ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மாவை சரமாரியாக விமர்சிக்கின்றனர்.



