இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. மறுபுறம் முதல் போட்டியிலேயே வெறும் 115 ரன்களை துரத்துவதற்கு தடுமாறி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 181 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக 2019க்கு பின் 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் அதே தொடருக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியுள்ள பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா பதிவு செய்துள்ள இந்த தோல்வி இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. பொதுவாக உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை 2 வருடங்களுக்கு முன்பாகவே துவக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதில் அசத்துபவர்களை உத்தேச பட்டியலில் தேர்ந்தெடுத்து இறுதிக்கட்ட தொடர்களில் சோதித்துப் பார்ப்பதே வழக்கமாகும்.
ரொம்ப நன்றி டிராவிட்:
அந்த சோதனைகளும் தடாலடியாக தேவைக்கு அதிகமாக இல்லாமல் வரம்புக்குள் இருப்பது அவசியமாகும். அது போன்ற நிலைமையில் தற்போதைய இந்திய அணியில் ரோஹித், கில், விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து 4வது இடத்தில் விளையாட தகுதியான ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ளார். எனவே அவருக்கான பேக் அப் வீரரை மட்டும் உருவாக்க வேண்டிய நிலைமை தற்போது இருக்கிறது என்றே சொல்லலாம். அதுபோன்ற சூழ்நிலையில் ரோஹித் முதல் பாண்டியா வரை அனைவருமே வலதுகை வீரர்களாக இருப்பதால் இஷான் கிசானுக்கு வாய்ப்பு கொடுத்து சோதித்துப் பார்ப்பது சிறந்த முடிவாக இருக்கும்.
ஆனால் அதை செய்யாத ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி இஷான் கிசானை தொடக்க வீரராக சோதித்து 4வது இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று பலமுறை நிரூபித்த சூரியகுமாருக்கு வலுக்கட்டாயமாக வாய்ப்பளித்து வருகிறது. அதன் உச்சமாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரையும் பெஞ்சில் அமர வைத்த ராகுல் டிராவிட் அக்சர் பட்டேலை 3வது இடத்தில் களமிறக்கி பேட்டிங் வரிசையை தாறுமாறாக இஷ்டத்திற்கு மாற்றியது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
இது மட்டுமல்லாமல் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கடந்த 2 வருடங்களில் சோதனை முயற்சி என்ற பெயரில் அவர் செய்யும் தேவையற்ற மாற்றங்கள் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை தேர்ந்தெடுக்காத அவர் இத்தொடரின் முதல் போட்டியில் 12 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா 7வது இடத்தில் களமிறங்க உந்துகோளாக இருந்தார்.
அப்படிய சரியான அணி தேர்வு செய்யாமல் தேர்வு செய்யும் வீரர்களையும் சரியாக பயன்படுத்தாமல் மாற்றம் முயற்சி என்ற பெயரில் அவர் செய்யும் குளறுபடிகளால் 2022 தென்னாபிரிக்க டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர், 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2022 வங்கதேச ஒருநாள் தொடர், 2023 ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற தொடர்களில் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது.
இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் 2007 உலக கோப்பையில் நீங்கள் செய்த மாற்றங்கள் தான் நியாபகத்திற்கு வருகிறது என்று ராகுல் டிராவிட் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக தொடக்க வீரராக அறியப்படும் சேவாக் மற்றும் டாப் ஆர்டர் வீரராக அறியப்படும் சச்சின் ஆகியோரை அந்த உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் கேப்டனாக டிராவிட் விளையாட வைத்த நிலையில் அதற்கான மொத்த பழியும் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மீது விழுந்தது.
இதையும் படிங்க:IND vs WI : இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கெத்தாக பேசிய வெ.இ கேப்டன் – என்ன சொன்னாரு தெரியுமா?
ஆனால் தற்போது தான் அந்த மாற்றத்திற்கு காரணம் நீங்களாக இருப்பீர்கள் என்பதை உணர்வதாக டிராவிட் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் கிட்டத்தட்ட 2007 உலகக்கோப்பை அணியை போலவே தற்போதைய இந்திய அணியில் தேவையற்ற மாற்றங்களை செய்து மொத்தமாக கெடுத்து வைத்துள்ளதற்கு நன்றி என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லப்போவதில்லை என்றும் ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.