
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக கே.எல். ராகுல் சதமடித்து 112*, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக சேசிங் செய்த நியூசிலாந்து 47.3 ஓவரில் 286/3 ரன்களை எடுத்து வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேரில் மிட்சேல் சதமடித்து 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.
இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் 300 ரன்கள் அடிக்காதது தோல்விக்கு முதல் காரணமானது. அதே போல பந்து வீச்சில் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுக்காதது மற்றொரு காரணமானது. குறிப்பாக கடந்த தென்னாப்பிரிக்க தொடரிலேயே தடுமாறிய பிரசித் கிருஷ்ணா இப்போட்டியிலும் மிடில் ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.
அதை விட நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேல் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து சதத்தை நெருங்கினார். அந்த சமயத்தில் நியூசிலாந்துக்கு 82 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட்டது. அதனால் அவருடைய விக்கெட்டை எடுத்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற சூழல் ஏற்பட்டது. அப்போது 82 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த மிட்சேல் இந்திய வீரர் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்தார்.
ஆனால் அந்த அழகான கேட்ச்சை பிடிக்கத் தவறிய பிரசித் கிருஷ்ணா கோட்டை விட்டார். அதைப் பயன்படுத்திய மிட்சேல் சதத்தை அடித்து 131* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை தூளாக்கினார். அந்த வகையில் பந்து வீச்சில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுக்கத் தவறிய கிருஷ்ணா ஃபீல்டிங்கில் முக்கியமான கேட்சை கோட்டை விட்டு இந்தியாவின் வெற்றிக்கு வேட்டு வைத்தார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சுயநலமற்ற கேஎல் ராகுல் இந்திய அணிக்காக.. டிராவிட் மாதிரி இந்த எல்லாத்தையும் செய்றாரு.. ஃகைப் பாராட்டு
அதனால் கோபமடைந்த ரசிகர்கள் இதற்கு பேசாமல் முகமது ஷமியை விளையாட வைக்கலாமே? என்று கௌதம் கம்பீரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இல்லையென்றாலும் இடது கை இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்கலாமே? என்றும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அதையெல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா மற்றும் ராணா போன்ற பவுலர்களுக்கு வாய்ப்பளிப்பது சரியா? என்றும் ரசிகர்கள் கம்பீரை விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.